வங்கதேசத்தில் ஸ்டார் ஹோட்டலில் பயங்கர தீ விபத்து; 10 பேர் பலி, 9 பேர் படுகாயம்!

 
தீ விபத்து

இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்தில் அமைந்துள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் திடீரென ஏற்பட்ட கோர தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உள்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வங்காளதேசத்தின் சிட்டகாங் மாகாணத்தில் உள்ள புகழ்பெற்ற காக்ஸ் பஜார் கடற்கரைப் பகுதியில் கடற்கரையோரமாக இந்த நட்சத்திர ஓட்டல் செயல்பட்டு வருகிறது. விடுமுறை தினமான நேற்று முன்தினம் காலை இந்த ஓட்டலில் எதிர்பாராதவிதமாகப் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஓட்டல் கட்டடத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் வேகமாகப் பரவிய தீயில் சிக்கி, அங்குத் தங்கியிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் உள்ளிட்ட பத்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் சிக்கி ஒன்பது பேர் படுகாயமடைந்தனர்.

தீவிபத்து

தீ விபத்து குறித்துத் தகவலறிந்து உடனடியாக நிகழ்விடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் நீண்ட நேரம் போராடிப் பற்றி எரிந்த தீயை வெற்றிகரமாக அணைத்தனர். மேலும், தீயில் சிக்கிக் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த விபத்துக்கான துல்லியமான காரணம் குறித்துக் காவல்துறையினர் தீவிரமான விசாரணையை நடத்தி வருகின்றனர்.