கார் ஷோரூமில் பயங்கரத் தீ விபத்து.. 30 புதிய கார்கள் எரிந்து சாம்பல் - கொல்கத்தாவில் சோகம்!
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தா அருகே உள்ள சர்வதேசக் கார் விற்பனையகம் ஒன்றில் அதிகாலையில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் 30 கார்கள் முற்றிலும் எரிந்து நாசமாகின.
கொல்கத்தாவில் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம், மத்யம்கிராம் பகுதியில் உள்ள ஜெஸ்சூர் சாலையில் அமைந்துள்ள கார் ஷோரூமில் அதிகாலை 4:45 மணியளவில் திடீரெனத் தீப்பற்றி எரிந்தது. சம்பவ இடத்திற்கு மத்யம்கிராம் மற்றும் பிரட்டி ஆகிய பகுதிகளில் இருந்து 8 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்தன. தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் தீவிரமாகப் போராடித் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த விபத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயமோ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை. இருப்பினும் ஷோரூமில் நிறுத்தப்பட்டிருந்த 30 கார்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின.

விபத்து காரணமாகச் சம்பவ இடத்தைச் சுற்றியுள்ள ஜெஸ்சூர் சாலையில் சிறிது நேரம் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தீ விபத்து நடந்த இடத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் டம்டம் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ள போதிலும், இதனால் விமானச் சேவைகளில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை எனப் பிதன்நகர் காவல் ஆணையரகம் உறுதி செய்துள்ளது.
மின்சாரக் கசிவு காரணமாக இந்த விபத்து நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்துக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
