திண்டுக்கல்லில் பயங்கர தீ விபத்து.. ரூ.1.5 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பல்!
திண்டுக்கல் மேட்டுப்பட்டி சாலையில் அமைந்துள்ள பிரபல மரக்குடோன் ஒன்றில் திடீரெனப் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மரக்குடோனில் இருந்து திடீரெனப் புகை மூட்டத்துடன் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. மரப் பொருட்கள் அதிகம் இருந்ததால் தீ கடகடவென குடோன் முழுவதும் பரவியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் 2 மணி நேரம் தீவிரமாகப் போராடி தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த விபத்தில் குடோனில் வைக்கப்பட்டிருந்த விலையுயர்ந்த மரப் பொருட்கள், உபகரணங்கள் மற்றும் தயாரிப்பு இயந்திரங்கள் உட்படச் சுமார் ரூ.1.5 கோடி மதிப்பிலான பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின. நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. தீ விபத்து மின் கசிவு காரணமாக ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்துக் காவல் துறையினரும் தீயணைப்புத் துறையினரும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
