தாம்பரம் அருகே ஃபிரிட்ஜ் வெடித்து பயங்கர தீ விபத்து - 8 இளைஞர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்!
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே குடியிருப்புப் பகுதியில் ஃபிரிட்ஜ் வெடித்துச் சிதறி விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முடிச்சூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இளைஞர்கள் தங்கி இருந்த அறையிலேயே இந்தத் திடீர் விபத்து நிகழ்ந்துள்ளது.
வீட்டின் அறையில் பயன்பாட்டில் இருந்த ஃபிரிட்ஜ் திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்துத் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.ஃபிரிட்ஜில் இருந்து தீ வேகமாகக் பரவுவதைக் கண்டதும், வீட்டில் இருந்த 8 இளைஞர்களும் நொடிப் பொழுதில் சாதுரியமாக அறையை விட்டு வெளியேறினர். இதனால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டு, அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
ஃபிரிட்ஜ் வெடித்ததில் ஏற்பட்ட பயங்கரத் தீயினால் அறையில் இருந்த பல லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்கள் சேதமடைந்தன. அறையில் வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சிப் பெட்டி, மர மேஜை, துணிமணிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தீயில் கருகி முற்றிலும் நாசமாகின.
விபத்து குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், போராடித் தீயைக் கட்டுப்படுத்தி முழுமையாக அணைத்தனர். இந்த தீ விபத்துக்கான சரியான காரணம் என்ன என்பது குறித்துக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
