கடலூர் அருகே சூப்பர் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து.. 3 பெண்கள் மயக்கம்!
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் ஏற்பட்ட திடீர் மின் கசிவு காரணமாகக் கரும்புகை சூழ்ந்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டுப் பெண் ஊழியர்கள் 3 பேர் மயங்கி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் செட்டித் தெருவில் பிரபல சூப்பர் மார்க்கெட் ஒன்று இயங்கி வருகிறது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், நேற்று இரவு 7.45 மணி அளவில் கடையில் வழக்கம்போலப் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது, எதிர்பாராதவிதமாக மின் கசிவு ஏற்பட்டு கடையில் இருந்த பொருட்கள் மற்றும் மின் சாதனங்களில் தீப்பிடிக்கத் தொடங்கியது. சில நிமிடங்களிலேயே கடை முழுவதும் அடர்ந்த கரும்புகை சூழ்ந்து கொண்டது.
சூப்பர் மார்க்கெட்டிற்குள் பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் திடீரெனப் பரவிய அடர் புகையைக் கண்டு மூச்சுத்திணறி அலறியடித்தபடி கடையை விட்டு வெளியே ஓடி வந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்த தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்கள், மேற்கொண்டு ஆபத்து பரவாமல் தடுக்க அப்பகுதிக்கான மின் இணைப்பைத் துண்டித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர், தண்ணீரைப் பீய்ச்சியடித்தும், சிறப்பு ரசாயனப் பொடிகளை தெளித்தும் புகையைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். அடர்ந்த புகைக்கு இடையே கடையில் பணியாற்றி வந்த பெண் ஊழியர்கள் 3 பேர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து காட்டுமன்னார்கோவில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
