குற்றாலம் மெயின் அருவியில் சுற்றித்திரிந்த உடும்பு - தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்பு!

 
குற்றாலம் உடும்பு

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அருவி நீரோட்டத்தில் அடித்து வரப்பட்ட உடும்பு ஒன்று மெயின் அருவிப் பகுதியில் சுற்றித்திரிந்த சம்பவம் சுற்றுலாப் பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்ததால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து மிகவும் குறைந்து காணப்பட்டது. இந்நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த சாரல் மழையின் காரணமாக அருவிகளுக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்துத் தண்ணீர் சீராகக் கொட்டத் தொடங்கியது. இதனால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் உற்சாகமாகக் குளித்து வந்தனர்.

குற்றாலம்

அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்த போது, மலையிலிருந்து அடித்து வரப்பட்ட உடும்பு ஒன்று திடீரென மெயின் அருவிப் பகுதியில் சுற்றித்திரிந்தது. இதைக் கண்ட சுற்றுலாப் பயணிகள் அச்சமும் அதிர்ச்சியும் அடைந்தனர். இது குறித்து உடனடியாகத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறை வீரர்கள், மெயின் அருவிப் பகுதியில் உலா வந்த உடும்பைப் பத்திரமாக மீட்டு அருகிலுள்ள வனப்பகுதிக்குள் கொண்டு சென்று பாதுகாப்பாக விட்டனர். தீயணைப்புத் துறையினரின் இந்த விரைவான நடவடிக்கையால் குற்றாலம் மெயின் அருவிப் பகுதியில் நிலவிய பரபரப்பு தணிந்தது.