பாஜக MLA வீட்டைச் சுத்தம் செய்யத் தீயணைப்பு வாகனம் - அதிகாரிகள் விசாரணை!
குஜராத் மாநிலம் தேவ்காத் பரியா தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் பச்சுபாய் காபாத்தின் வீட்டைச் சுத்தம் செய்வதற்காகத் தீயணைப்புத் துறை வாகனம் பயன்படுத்தப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
MLA-வின் வீட்டின் ஒரு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தீயணைப்புத் துறைக்கு அவசரத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை நம்பி அவசரமாக அங்குத் தீயணைப்பு வாகனத்துடன் மீட்புக் குழுவினர் விரைந்து சென்றுள்ளனர்.
சம்பவ இடத்திற்குச் சென்ற பிறகே, அங்கு எந்தவித தீ விபத்தும் நடைபெறவில்லை என்பதும், மாறாக MLA-வின் வீட்டைச் சுத்தம் செய்யும் பணிகளுக்காக மட்டுமே தாங்கள் வரவழைக்கப்பட்டுள்ளோம் என்பதும் தீயணைப்பு வீரர்களுக்குத் தெரியவந்துள்ளது.
அரசுக்குச் சொந்தமான அவசரகாலத் தீயணைப்பு வாகனத்தைத் தங்களது சொந்தத் தேவைகளுக்காகப் பயன்படுத்திய இச்சம்பவம் அப்பகுதியில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
