அமெரிக்காவில் தீ விபத்து.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 இந்தியர்கள் பலி!
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் அவர்களது இளம் மகள் உட்பட 3 இந்தியர்கள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்த துயரச் சம்பவம் அமெரிக்கா மற்றும் இந்தியாவில் உள்ள அவர்களது உறவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மாநிலமான குஜராத்தின் கேடா மாவட்டம் நாடியாத் பகுதியைச் சேர்ந்தவர் ஹிதேஷ்பாய் சுதார் இவரது மனைவி ஹினாபென். இவர்களது 20 வயது மகள் இஷானி. இந்தக் குடும்பத்தினர் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகக் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்புதான் இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்தனர்.
அமெரிக்காவிற்கு வந்த பிறகு, ஹிதேஷ்பாய் சுதார் ஓஹியோ மாகாணத்தில் உள்ள வூஸ்டர் நகரில் செயல்பட்டு வரும் தனியார் ஹோட்டல் ஒன்றில் ஊழியராகப் பணியில் சேர்ந்தார். ஹிதேஷ்பாய் சுதார் தான் வேலை பார்த்து வந்த அதே வூஸ்டர் ஹோட்டல் வளாகத்திலேயே தனது மனைவி மற்றும் மகளுடன் தங்கி வசித்தும் வந்துள்ளார். குடும்பத்தை நிவர்த்தி செய்ய அவரது மனைவி ஹினாபென் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்திலும், மகள் இஷானி மற்றொரு உணவகத்திலும் பகுதிநேரமாகப் பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில், அவர்கள் தங்கியிருந்த அந்த ஹோட்டல் கட்டிடத்தில் நள்ளிரவில் எதிர்பாராத விதமாகக் கடுமையான தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவெனக் கட்டிடத்தின் பிற பகுதிகளுக்கும், அவர்கள் தங்கியிருந்த அறைக்கும் பரவியதால், நச்சுப் புகையினாலும் கடுமையான தீ ஜுவாலையினாலும் மூச்சுத்திணறி ஹிதேஷ்பாய் சுதார், ஹினாபென் மற்றும் இஷானி ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்து வந்த வூஸ்டர் நகரத் தீயணைப்புப் படையினர் நீண்ட நேரம் போராடித் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் மூவரின் உடல்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்தத் தீ விபத்திற்கான காரணம் குறித்து ஓஹியோ மாகாணப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து குறித்து நியூயார்க்கில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்களை குஜராத்திற்கு கொண்டு வருவது தொடர்பாக அமெரிக்காவில் உள்ள குஜராத் சங்கத்தினர் மற்றும் இந்தியத் தூதரக அதிகாரிகள் தேவையான சட்டப்பூர்வ நடவடிக்கைகளைத் தற்பொழுது போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றனர்.
