தீமிதி திருவிழா... அக்னி குண்டத்தில் தவறி விழுந்த பக்தர் படுகாயம்!

 
fire

திருவள்ளூர் அடுத்த மப்பேடு கிராமத்தில் அமைந்துள்ள ஓசூரம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா கடந்த மாதம் 24ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் மிகவும் விமரிசையாகத் துவங்கியது. அதனைத் தொடர்ந்து கோயிலில் பல்வேறு சிறப்பு வழிபாடுகளும் உற்சவ நிகழ்ச்சிகளும் பல நாட்களாகத் தொடர்ந்து நடைபெற்று வந்தன. விழாவின் சிகர நிகழ்வான தீமிதிக்கும் திருவிழா நேற்று முன்தினம் அப்பகுதியில் பக்திப் பரவசத்துடன் வெகு விமரிசையாக நடைபெற்றது.

ஆம்புலன்ஸ்

விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள், சாமி ஊர்வலத்துடன் கரகங்கள் ஏந்தி ஊர்வலமாக வந்து கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் இறங்கித் தீமிதித்தனர். அப்போது கூட்ட நெரிசலில் முதியவர் ஒருவர் கால் தவறி அக்னி குண்டத்தில் நேராக விழுந்தார். அங்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் மற்றும் விழா நடத்துபவர்கள் உடனடியாகத் துரிதமாகச் செயல்பட்டு அவரை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

தீயில் விழுந்ததால் அந்த முதியவருக்குத் தோள்பட்டையில் தீக்காயங்கள் ஏற்பட்ட நிலையில், உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு அவர் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகிறார். தீமிதி திருவிழாவின்போது பக்தர் ஒருவர் அக்னி குண்டத்தில் தவறி விழுந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.