25 பேர் பலியான பட்டாசு ஆலை விபத்து... உரிமையாளர் ஈஸ்வரி கோவையில் கைது!

 
பட்டாசு வெடிவிபத்து பட்டாசு வெடிவிபத்து

விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டியில் நிகழ்ந்த கோரமான பட்டாசு ஆலை வெடி விபத்து வழக்கில், கடந்த 8 நாட்களாகத் தலைமறைவாக இருந்த உரிமையாளர் ஈஸ்வரி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் 19-ம் தேதி, கட்டனார்பட்டியில் உள்ள வனஜா பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 25 தொழிலாளர்கள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. விபத்தைத் தொடர்ந்து ஆலையின் உரிமையாளர் ஈஸ்வரி தலைமறைவானார்.

பட்டாசு ஆலை வெடி

ஈஸ்வரியைப் பிடிக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தீவிரத் தேடுதல் வேட்டையில், அவர் கோவையில் உள்ள தனது உறவினர் வீட்டில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இன்று காலை தனிப்படை போலீசார் அங்கு சென்று அவரை அதிரடியாகக் கைது செய்தனர்.

இந்த விபத்து தொடர்பாக ஈஸ்வரியின் கணவர் முத்துமாணிக்கம் ஏற்கனவே நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். தலைமறைவாக இருந்த ஈஸ்வரிக்கு அடைக்கலம் கொடுத்த உறவினர்கள் முத்துராஜ், வைரமுத்து உட்பட 3 பேரும் முன்னதாகவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

விருதுநகர் பட்டாசு சிவகாசி வெடிவிபத்து

மாவட்ட ஆட்சியர் இந்த விபத்து குறித்து நேரில் விசாரணை நடத்திய நிலையில், உரிமையாளரின் கைது ஒரு முக்கியத் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. விதிகளை மீறி பட்டாசுகள் கையாளப்பட்டதா அல்லது போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லையா என்பது குறித்துப் போலீசார் தற்போது ஈஸ்வரியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.