இயக்குநராக முதல் தேசிய விருது - ’எண்ணம் போல் வாழ்க்கை’... தனுஷ் நெகிழ்ச்சி!
மத்திய அரசு அறிவித்துள்ள 72-வது தேசிய திரைப்பட விருதுகளில், தமிழ் திரையுலகைச் சேர்ந்த பல திரைப்படங்களுக்கும் கலைஞர்களுக்கும் உயரிய அங்கீகாரங்கள் கிடைத்துள்ளன. 2024-ஆம் ஆண்டு தணிக்கைச் சான்றிதழ் பெற்ற திரைப்படங்களின் அடிப்படையில் இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
இதில், நடிகர் தனுஷ் இயக்குநராகத் தனது முதல் தேசிய விருதைப் பெற்று சாதனை படைத்துள்ளார். அத்துடன் நடிகராகவும் அவருக்குச் சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது திரையுலகினரிடையேயும் அவரது ரசிகர்களுகிடையேயும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தேசிய விருது அறிவிப்பில் தனுஷிற்கு இரண்டு முக்கிய அங்கீகாரங்கள் கிடைத்துள்ளன. தனுஷ் இயக்கி, கதாநாயகனாக நடித்த "ராயன்" திரைப்படம் சிறந்த தமிழ் மொழிக்கான தேசிய விருதை வென்றுள்ளது. "கேப்டன் மில்லர்" திரைப்படத்தில் வெளிப்படுத்திய சிறப்பான நடிப்புக்காக தனுஷிற்குச் சிறந்த நடிகருக்கான சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநராகத் தனது முதல் தேசிய விருதைப் பெற்றுக் கொண்ட பிறகு, நடிகர் தனுஷ் நெகிழ்ச்சியுடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "ஏற்கனவே நடிகராக 3 முறை தேசிய விருதுகளைப் பெற்றிருந்தாலும், இயக்குநராகப் பெற்றுள்ள இந்த முதல் தேசிய விருது என் வாழ்நாளில் என்றும் மறக்க முடியாத ஒரு பெரும் ஆசீர்வாதம்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனக்குக் கிடைத்துள்ள இந்த மாபெரும் வெற்றியைத் தனக்கு எப்போதும் பக்கபலமாக இருக்கும் ரசிகர்களுக்கும், தொடர்ந்து ஆதரவளித்து வரும் ஊடகங்களுக்கும் தனுஷ் சமர்ப்பித்துள்ளார். மேலும், "எண்ணம் போல் வாழ்க்கை" என்ற தத்துவ வரிகளுடன், 'ஹர ஹர மகாதேவ்' என்ற முழக்கத்தோடு தனது மனமார்ந்த நன்றியை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
