பதவியேற்புக்கு பின் முதல் பயணம்.. இன்று இலங்கை செல்கிறார் துணை குடியரசுத் தலைவர் சி.பி.ஆர்!
இந்தியத் துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், தனது பதவியேற்புக்குப் பிறகு முதன்முறையாக அரசுமுறைப் பயணமாக இன்று இலங்கை செல்கிறார். இரண்டு நாட்கள் மேற்கொள்ளும் இந்தப் பயணமானது, இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் ஒரு முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
இலங்கை செல்லும் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள், அந்நாட்டின் முக்கியத் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகே மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரியா ஆகியோரைச் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசிக்கிறார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா மற்றும் இலங்கைத் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் அவர் நேரில் சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளார்.
இந்தப் பயணத்தின் போது இந்தியா - இலங்கை இடையே பல்வேறு துறைகளில் முக்கிய உடன்படிக்கைகள் எட்டப்படும் எனத் தெரிகிறது. குறிப்பாக மின்சாரம் மற்றும் எரிபொருள் பரிமாற்றம் தொடர்பான ஒப்பந்தங்கள். இரு நாட்டு மீனவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு நிரந்தரத் தீர்வு காண்பது குறித்த பேச்சுவார்த்தை. பிராந்திய வளர்ச்சி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல்.

அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் அடிப்படையில், துணை குடியரசுத் தலைவரின் இந்தப் பயணம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
