ரூ.5-க்கு மீன் குழம்புடன் சாப்பாடு... மேற்குவங்க முதல்வர் அறிவிப்பு!
மேற்குவங்க மாநிலத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, அங்கு முதன்முறையாகப் பொறுப்பேற்றுள்ள பாஜக அரசின் முதலமைச்சர் சுவேந்து அதிகாரி, ஏழை எளிய மக்களுக்காக ஒரு புதிய அதிரடி உணவுத் திட்டத்தை இன்று அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஏழை எளிய மக்களின் பசியைப் போக்கி வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க 'அம்மா உணவகம்' திட்டத்தைப் போல, மேற்குவங்கத்தில் அரசு சார்பில் வெறும் 5 ரூபாய்க்கு மீன் குழம்புடன் கூடிய மதிய உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்படவுள்ளது.
மேற்குவங்க மக்களின் முதன்மை மற்றும் பாரம்பரிய உணவாக மீன் விளங்குவதால், அதனை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அரசு நடத்தும் பிரத்தியேக உணவகங்கள் மூலம் ஏழை எளிய மக்கள், தொழிலாளர்கள் மற்றும் தினக்கூலிகள் பயன்பெறும் வகையில் வெறும் ரூ.5 என்ற மிகக் குறைந்த விலையில் மீன் குழம்பும் சாதமும் மதிய உணவாக வழங்கப்படும்.

முதற்கட்டமாக மேற்குவங்க மாநிலம் முழுவதும் சுமார் 400 புதிய அரசு உணவகங்கள் இதற்காகத் திறக்கப்பட உள்ளன. இந்த உணவகங்களில் வாரம் இருமுறை இந்த மீன் உணவு விநியோகம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குவங்கத்தில் 15 ஆண்டுகால மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி, கடந்த மே 9-ஆம் தேதி தான் சுவேந்து அதிகாரி அம்மாநிலத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றார்.
பதவியேற்ற சில நாட்களிலேயே, பெண்களுக்கு மாதம் ரூ.3,000 வழங்கும் 'அன்னபூர்ணா யோஜனா' மற்றும் மத்திய அரசின் 'ஆயுஷ்மான் பாரத்' போன்ற திட்டங்களை அதிரடியாக அனுமதித்த சுவேந்து அதிகாரி, அடித்தட்டு மக்களைக் கவரும் விதமாக இந்த 5 ரூபாய் உணவுத் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளார்.
மாநிலத்தின் ஏழை எளிய மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த மலிவு விலை உணவகத் திட்டம், அம்மாநில மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
