மீன் தொட்டியை சுத்தம் செய்தபோது மின்சாரம் தாக்கி பள்ளி மாணவர் பலி!

 
kovai kovai

கோவையை அடுத்த பேரூர் அருகே உள்ள அண்ணா நகரைச் சேர்ந்த காளீஸ்வரன் என்பவரின் 13 வயது மகன் விஷ்வா. இவர் அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு, அடுத்த வகுப்பில் சேரத் தயாராக இருந்தார். இந்தச் சிறுவனுக்குத் தனது வீட்டில் மீன் வளர்ப்பதில் அதிக ஆர்வம் இருந்துள்ளது. இதனால் வீட்டில் ஒரு சிறிய தொட்டியை அமைத்து பல்வேறு வகையான மீன்களை அவர் ஆசையாக வளர்த்து வந்துள்ளார்.

ஆம்புலன்ஸ்

இந்நிலையில் நேற்று காலை தூங்கி எழுந்த   விஷ்வா, தனது வீட்டில் இருந்த மீன் தொட்டி அசுத்தமாக இருப்பதை கவனித்துள்ளார். உடனே அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்து மீன்களுக்கு உணவு போட அவர் முடிவு செய்தார். ஆனால் அவசரத்தில் மீன் தொட்டிக்குச் செல்லும் மின்சார சுவிட்ச்சை அணைக்க அவர் மறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக உள்ளே இருந்த மின் மோட்டாரை அவர் கையில் எடுத்துள்ளார்.

அப்போது திடீரென மின்சாரம் பாய்ந்ததில் அவர் தூக்கி வீசப்பட்டு அலறியபடி கீழே விழுந்தார். மகனின் சத்தம் கேட்டுப் பெற்றோர் ஓடி வந்து பார்த்தபோது சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மீன் தொட்டியைச் சுத்தம் செய்ய முயன்ற சிறுவன் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.