தூத்துக்குடி கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த 16 கேரள மீனவர்கள் சிறைபிடிப்பு.!

 
மீனவர்கள் மீனவர்கள்

 

தமிழகக் கடல் பகுதியில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 60 நாட்களுக்கு விசைப்படகுகள் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தடைக்காலம் அமலில் உள்ளதால், தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் தங்களது படகுகளைக் கரையில் நிறுத்தி வைத்துள்ளனர். இந்தச் சூழலைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட கேரள மீனவர்கள், தூத்துக்குடி கடல் எல்லைக்குள் புகுந்து கடந்த சில நாட்களாகத் திருட்டுத்தனமாக மீன்பிடித்து வந்துள்ளனர்.

மீனவர்கள்

நேற்று இரவு தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்குச் சென்று கண்காணித்தபோது, அங்கு கேரள மாநிலத்தைச் சேர்ந்த மீனவர்கள் அத்துமீறி மீன்பிடித்துக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாகச் செயல்பட்ட அவர்கள், எல்லை தாண்டி மீன்பிடித்த கேரள மீனவர்கள் 16 பேரை அவர்களது விசைப்படகுடன் சிறைபிடித்துக் கரைக்குக் கொண்டு வந்தனர். பின்னர், பிடிபட்ட மீனவர்கள் மற்றும் படகைத் தூத்துக்குடி கடலோரப் பாதுகாப்புப் படை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

தற்போது கடலோரப் பாதுகாப்புப் படை போலீசாரும், மீன்வளத்துறை அதிகாரிகளும் கைதான 16 கேரள மீனவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழக மீனவர்கள் தடைக்காலத்தைப் பின்பற்றி வரும் வேளையில், அண்டை மாநில மீனவர்கள் எல்லைக்குள் புகுந்து மீன்வளத்தைச் சுரண்டுவது தூத்துக்குடி மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.