மீன்வள பல்கலைக்கழகத் தரவரிசைப் பட்டியல் வெளியீடு... கடலூர், அரியலூர் மாணவர்கள் முதலிடம் பிடித்து அசத்தல்!
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 10 உறுப்புக் கல்லூரிகள் மற்றும் ஒரு தனியார் கல்லூரிக்கான நடப்பு கல்வியாண்டுத் தரவரிசைப் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இப்பல்கலைக்கழகத்தில் மீன்வள அறிவியல், மீன்வள பொறியியல், உணவு தொழில்நுட்பம், வணிக நிர்வாகம் மற்றும் தொழில்சார் படிப்புகள் உட்படப் பல்வேறு பிரிவுகளில் நூற்றுக்கணக்கான இடங்கள் உள்ளன. இந்த பட்டப்படிப்புகளில் சேர்ந்து பயில்வதற்காக மாநிலம் முழுவதிலும் இருந்து சுமார் 15,585 மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் விண்ணப்பித்திருந்தனர். நாகப்பட்டினத்தில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில், பல்கலைக்கழகத் துணைவேந்தர் தரவரிசைப் பட்டியலை முறைப்படி வெளியிட்டார்.

வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனிஷ்குமார், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சேதுராஜன் மற்றும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரியவதனா ஆகியோர் சாதனை படைத்துள்ளனர். இவர்கள் மூவரும் 200-க்கு 199.50 கட்-ஆஃப் மதிப்பெண்கள் பெற்றுத் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளனர். அவர்களைத் தொடர்ந்து மாணவி அக்ஷயா 198.89 மதிப்பெண்களுடன் தரவரிசையில் இரண்டாம் இடத்தைப் பிடித்துப் சாதனை படைத்துள்ளார். முதலிடம் பிடித்த மாணவர்களுக்குப் பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.
தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மாணவர் சேர்க்கைக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன்படி முதற்கட்ட கலந்தாய்வு நாகப்பட்டினத்தில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் நேரடியாக நடைபெற உள்ளது. தரவரிசையில் முன்னிலை பெற்ற மாணவர்களுக்குக் கலந்தாய்வு குறித்த அழைப்புத் தகவல்கள் விரைவாக அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
