மீன்பிடி தடைக்காலம்: மீன்கள் விலை கடும் உயர்வு!

 
மீன் காசிமேடு மீன் காசிமேடு

தமிழகத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படும் மீன்பிடி தடைக்காலம், நாளை ஏப்ரல் 15ம் தேதி (புதன்கிழமை) முதல் தொடங்குகிறது. ஜூன் 14 வரை 61 நாட்களுக்கு இந்தத் தடை நீடிக்கும். இதன் காரணமாக, சென்னை காசிமேடு மீன் சந்தையில் மீன்களின் விலை வழக்கத்தை விட 3 மடங்கு வரை உயர்ந்துள்ளது.

தடைக்காலம் தொடங்கவுள்ளதால், ஆழ்கடலுக்குச் சென்றிருந்த 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நேற்று நள்ளிரவு முதல் கரை திரும்பத் தொடங்கிவிட்டன. இதனால் வரத்து பாதியாகக் குறைந்துள்ளது.

மீன் மீன்கள் இறைச்சி மீனவர்கள

கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 12) தடைக்காலத்திற்கு முந்தைய கடைசி விடுமுறை தினம் என்பதால், மக்கள் கூட்டம் அலைமோதியது. இது விலையை மேலும் உயர்த்தியது.

ஜூன் 14 வரை விசைப்படகுகள் கடலுக்குச் செல்ல அனுமதியில்லை. சிறிய ரக நாட்டுப் படகுகள் மட்டுமே மீன்பிடிக்கச் செல்ல முடியும் என்பதால், பெரிய வகை மீன்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு ஆண்டுதோறும் வழங்கும் ரூ.8,000 நிவாரணத் தொகை, தேர்தல் காலம் என்பதால் கடந்த மாதமே பல மீனவர்களின் வங்கி கணக்குகளில் முன்கூட்டியே செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மீன்

ஆழ்கடல் மீன் வரத்து குறையும் என்பதால், வரும் நாட்களில் கேரளா மற்றும் ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்து வரும் ஐஸ் மீன்களின் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வஞ்சிரம் மீன் சாதாரண நாட்களில் 1 கிலோ ரூ.600 முதல் ரூ.800 வரையில் விற்கப்படும் நிலையில் தற்போது ரூ.1,600 முதல் ரூ.1,800 வரையில் விற்பனை செய்யப்படுகிறது.

மீன் வகை

சாதாரண விலை (ரூ.)

தற்போதைய விலை (ரூ.)

வஞ்சிரம்

600 - 800

1,600 - 1,800

கருப்பு வாவல்

450 - 550

900 - 1,000

சங்கரா

250 - 350

600 - 700

நண்டு

300 - 400

800 - 900