அடுத்தடுத்து 5 முறை வான்வழித் தாக்குதல்... சூடான் - எகிப்து எல்லையில் 72 தொழிலாளர்கள் பலி!
சூடான் மற்றும் எகிப்து நாடுகளுக்கு இடைப்பட்ட எல்லைப் பகுதியில் செயல்பட்டு வந்த சட்டவிரோத மற்றும் முறைசாரா தங்கச் சுரங்கத்தின் மீது நடத்தப்பட்ட திடீர் வான்வழித் தாக்குதலில் 72 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சூடானின் வடக்குப் பகுதியில் உள்ள செங்கடல் எல்லைக்கருகே அமைந்துள்ள 'ஜபல் அல்-உகைதத் என்ற மலைப்பகுதியில் பல முறைசாரா தங்கச் சுரங்கங்கள் இயங்கி வருகின்றன. இப்பகுதியில் கடந்த சனிக்கிழமை காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். காலை சுமார் 8:00 மணி அளவில் திடீரென அப்பகுதிக்கு வந்த போர் விமானம் ஒன்று, சுரங்கப் பகுதிகளைக் குறிவைத்து அடுத்தடுத்து ஐந்து முறை குண்டுவீசி வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.

இந்தத் திடீர் தாக்குதலில் அங்கிருந்த சுரங்கங்கள் பல தகர்ந்தன. இதில் சம்பவ இடத்திலேயே பல தொழிலாளர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். தாக்குதலின் கோரத் தன்மையால் அதிர்ச்சியடைந்த மற்ற தொழிலாளர்கள் உயிர் பிழைப்பதற்காக அருகிலுள்ள மலைப் பகுதிகளுக்கு அலறியடித்து ஓடினர். இந்த கொடூரத் தாக்குதலில் குறைந்தது 72 தொழிலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சூடானின் மனித உரிமை அமைப்பான 'தி எமர்ஜன்சி லாயர்ஸ்' மற்றும் உள்ளூர் ஊடகங்கள் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளன. இடிபாடுகளில் சிக்கி மேலும் பலர் காயமடைந்துள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த நாடோ அல்லது அமைப்போ அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும், சூடான் - எகிப்து எல்லையோரம் அமைந்துள்ள இப்பகுதி நீண்ட காலமாகவே தங்கம் கடத்தல், சட்டவிரோதப் பரிவர்த்தனைகள் மற்றும் மனித கடத்தலுக்கான வழித்தடமாகப் பயன்படுத்தப்பட்டு வருவதாகப் புகார்கள் உள்ளன. எல்லைப் பாதுகாப்பு மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் எகிப்து நாட்டு ராணுவப் படையினரின் போர் விமானங்களே இந்த வான்வழித் தாக்குதலை நடத்தியிருக்கக்கூடும் என வலுவான சந்தேகங்கள் எழுந்துள்ளன.

முன்னதாக, இதே பகுதியில் கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்ட இது போன்ற ஒரு வான்வழித் தாக்குதலில் 23 தொழிலாளர்கள் கொல்லப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. சூடானில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், லட்சக்கணக்கான மக்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக இது போன்ற முறைசாரா தங்கச் சுரங்கங்களை நம்பி வேலை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து இது போன்ற வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்படுவது அப்பாவித் தொழிலாளர்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
