ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு.... 7 மணி நேரமாக பள்ளிக்குச் செல்ல முடியாமல் மாணவர்கள் தவிப்பு!
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவில், ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் சிக்கிக்கொண்டு நீண்ட நேரம் தவித்து வீடு திரும்பிய சம்பவம் அக்கிராமங்களில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி கொலையம், அரசமரத்தூர், கோரணுர், தானிமரதூர், நெக்கினி, பட்டிகொல்லை, ஜவ்வாது மலை உள்ளிட்ட மலைகிராமங்களில் வசிக்கும் மாணவர்கள், தானியமரத்தூர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் படிக்கிறார்கள். இவர்கள் பள்ளிக்குச் செல்லும் வழியாக அமிர்தி பகுதியில் உள்ள ஆறு வழியாக நடைபயணமாக செல்கின்றனர்.

காலாண்டு விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறந்த நிலையில், நேற்றுமுன் தினம் முதல் மாணவர்கள் பள்ளிக்குச் செல்லத் தொடங்கினர். அந்த நேரத்தில் நெக்கினி கிராமத்திலிருந்து நடந்து சென்ற மாணவர்கள், ஆற்றில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதையில் முடங்கினர். ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆற்றின் ஒரு பக்கம் இழுத்து நிறுத்தப்பட்ட நிலையில், எவ்வாறு செல்லுவது என்ற புரியாமையில் சுமார் 7 மணி நேரம் காத்திருந்து பின்னர் வீடு திரும்பினர்.
மேலும், பலாம்பட்டு மலை பகுதியில் இருந்து விடுதிக்கு திரும்பிய மாணவர்களும் அதேபோன்று வெள்ளத்தில் சிக்கி தவித்தனர். பெற்றோர்களுடன் தொடர்பு கொள்ள முடியாமல் மாணவர்கள் தவித்த நிலையில், அந்த வழியாக சென்றவர்கள் தகவல் தெரிவித்த பிறகு உதவிகள் செய்யப்பட்டன.
மாணவர்களும், கிராம மக்களும், இந்த பகுதியில் பண்டிகை காலங்களில் மட்டும் அல்லாமல், சாதாரண காலத்திலும் வெள்ளம் பெருக்கெடுக்கும் போது பாதிக்கப்படும் நிலை தொடர்வதாக தெரிவிக்கின்றனர். இதனால், ஆற்றிற்கு மேல் நிலையான பாலம் கட்டுவது மிகவும் அவசியம் என வலியுறுத்துகின்றனர். பாலம் இல்லாததால், மருத்துவமனை, கடைகள், மற்றும் அவசர தேவைக்கான பிற பகுதிகளுக்குச் செல்லவும் மிகுந்த சிரமம் ஏற்பட்டுவருகிறது.
ஒரு பள்ளி மாணவர் “வெள்ளப்பெருக்கு வரும் போதெல்லாம் வீட்டிலேயே தங்க நேரிடுகிறது. உயிர் பயத்துடன் ஆற்றை கடக்க வேண்டிய நிலை இருக்கிறது” என்றார். முன்னாள் ஊராட்சி உறுப்பினர் ஒருவர், “இது எங்கள் பல ஆண்டுகாலக் கோரிக்கை. மேம்பாலம் கட்டினால் மாணவர்களின் கல்வி தொடரும்; மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதுகாக்கப்படும்” எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில், வனத்துறை அதிகாரி அசோக் குமார், சம்பந்தப்பட்ட பகுதியில் ஆய்வு நடத்தப்பட இருப்பதாகவும், அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஆய்வு முடிந்த பிறகு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் கூறினார்.
