குற்றாலம் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு... சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!
தென்காசி மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் திடீரென நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றாலம் அருவிகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக அருவிகளுக்கு வரும் நீரின் அளவு திடீரென வெகுவாக அதிகரித்துள்ளது. இதனால் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் தண்ணீர் கொப்பளித்து வெள்ளமாகப் பாய்ந்து வருகிறது.

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை சார்பில் அருவிகளில் பயணிகள் இறங்கவும் குளிக்கவும் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆபத்தான சூழலைத் தவிர்க்க அருவிப் பகுதிகளில் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நீர்வரத்து இயல்பு நிலைக்குத் திரும்பிய பிறகே சுற்றுலாப் பயணிகள் மீண்டும் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
