FLASH: நாடு முழுவதும் பரபரப்பு... இன்றிரவு 8:30 மணிக்கு பிரதமர் மோடி உரை - ‘அதிரடி’ அறிவிப்பா?!
பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 8:30 மணிக்குத் தொலைக்காட்சிகள் மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாக நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார். நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில், பெண்கள் இடஒதுக்கீடு மசோதா (131-வது அரசியலமைப்பு சட்டத் திருத்தம்) தோல்வியடைந்தது.
மக்களவைத் தொகுதிகளை 816-ஆக உயர்த்துவது தொடர்பான இந்த மசோதாவிற்கு ஆதரவாக 298 வாக்குகளும், எதிராக 230 வாக்குகளும் கிடைத்தன. மூன்றில் இரண்டு பங்கு (352 வாக்குகள்) ஆதரவு கிடைக்காததால் மசோதா நிறைவேற்றப்படவில்லை.

தொகுதி மறுவரையறை மூலம் தமிழ்நாடு போன்ற தென்னிந்திய மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்க அரசு முயல்வதாக ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மசோதா தோல்வியடைந்தது குறித்துப் பிரதமர் தனது வருத்தத்தைப் பதிவு செய்வதோடு, எதிர்க்கட்சிகள் மீதான தனது விமர்சனங்களை முன்வைக்கலாம் எனக் கருதப்படுகிறது.
வழக்கமாக இரவு நேரத்தில் உரையாற்றும் போது பணமதிப்பிழப்பு (2016) அல்லது லாக்டவுன் (2020) போன்ற அதிரடி முடிவுகளைப் பிரதமர் அறிவித்திருப்பதால், இன்றும் மக்கள் மத்தியில் ஒருவித 'ஆக்கப்பூர்வமான அச்சம்' கலந்த எதிர்பார்ப்பு உள்ளது.

தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் தேர்தல் நடைபெற உள்ள சூழலில், அமைதியான முறையில் ஜனநாயகக் கடமையாற்ற அவர் வேண்டுகோள் விடுக்கலாம்.
“மக்களாட்சியைப் பாதுகாக்கவே இந்த மசோதாவை முறியடித்தோம்” என ராகுல் காந்தி இன்று பொன்னேரி பிரசாரத்தில் பேசியுள்ள நிலையில், அதற்குப் பிரதமர் மோடி இன்று இரவு அளிக்கப்போகும் பதில் என்னவாக இருக்கும் என்பதே இப்போதைய ஹாட் டாபிக்.
