FLASH: அமெரிக்கா - ஈரான் அமைதி பேச்சுவார்த்தை திடீர் ரத்து - இஸ்ரேலின் தொடர் தாக்குதலால் முடங்கியது!

 
ஈரான் அமெரிக்கா

சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் இன்றுஅமெரிக்கா மற்றும் ஈரான் நாட்டு உயர் மட்ட பிரதிநிதிகளுக்கு இடையே நடைபெற இருந்த மிக முக்கியமான அமைதி பேச்சுவார்த்தை, கடைசி நேரத்தில் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றத்தைத் தணிப்பதற்காக இரு நாடுகளும் ஏற்கனவே ஒரு முதற்கட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த நிலையில், இந்த திடீர் ரத்து உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் ஆகியோர் கடந்த புதன்கிழமை அன்று பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்கான 14 அம்சங்கள் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதன் தொடர்ச்சியாக, அடுத்தகட்ட தொழில்நுட்ப மற்றும் அணுசக்தி விவகாரங்கள் குறித்துப் பேசுவதற்காக அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வென்ஸ் மற்றும் ஈரானிய தூதர்கள் ஜெனிவாவிற்கு வரவிருந்தனர்.

அமெரிக்கா ஈரான்

இருப்பினும், இந்த அமைதி ஒப்பந்தத்தின் முக்கிய நிபந்தனையான "லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும்" என்ற விதியை மீறி, இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் தெற்கு லெபனான் மீது கடந்த இரவு முதல் மிகக் கடுமையான வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இந்தத் தாக்குதலில் லெபனானில் 16-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், ஹிஸ்புல்லா அமைப்பினருடன் தீவிரச் சண்டை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அமைதி ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடக்கும்போதே, அமெரிக்காவின் கூட்டணி நாடான இஸ்ரேல் லெபனான் மீது கொடூரத் தாக்குதலை நடத்தி வருவதால், ஈரான் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க மறுத்துவிட்டது. அமெரிக்கா தங்களுக்கு வழங்கிய வாக்குறுதியின்படி, இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தி, லெபனானில் இருந்து இஸ்ரேலியப் படைகளை முழுமையாகத் திரும்பப் பெறச் செய்ய வேண்டும்; அதுவரை தங்களின் பிரதிநிதிகள் குழு சுவிட்சர்லாந்திற்குப் பயணம் செய்யாது என்று ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா - ஈரான்

இதனைத் தொடர்ந்து, அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி.வென்ஸ் தனது சுவிட்சர்லாந்து பயணத்தை அதிகாரப்பூர்வமாக ரத்து செய்துள்ளார். இந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளதைச் சுவிட்சர்லாந்து வெளியுறவு அமைச்சகமும் உறுதிப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, உலகச் சந்தையில் தற்காலிகமாகச் சீரடையத் தொடங்கியிருந்த கச்சா எண்ணெய் விலையில் மீண்டும் ஏற்ற இறக்கங்கள் ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.