FLASH: போலீஸ் அனுமதிக்குப் பிறகும் பெரம்பூரில் பிரசாரத்தை ரத்து செய்தார் விஜய்: ரசிகர்கள் ஏமாற்றம்!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இன்று (ஏப்ரல் 18) சென்னை பெரம்பூரில் மேற்கொள்ளவிருந்த தனது தேர்தல் பரப்புரையைத் திடீரென ரத்து செய்துள்ளார். காவல்துறை அனுமதி வழங்கிய பின்னரும் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்திலும், அவரது ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டியிட வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் நிலையில், இன்று அங்கு வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காகக் காவல்துறையிடம் உரிய அனுமதியும் பெறப்பட்டிருந்தது. இருப்பினும், கடைசி நேரத்தில் பரப்புரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக வில்லிவாக்கம் மற்றும் தி.நகர் ஆகிய பகுதிகளிலும் இதேபோல் அனுமதி கிடைத்த பின் பரப்புரைகள் ரத்து செய்யப்பட்டன. இதற்குப் பின்னால் சில முக்கியக் காரணங்கள் கூறப்படுகின்றன.
விஜய் பரப்புரைக்கு வரும் இடங்களில் கட்டுக்கடங்காத கூட்டம் கூடுவதால், ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்குப் பாதுகாப்புச் சிக்கல்கள் ஏற்படுகின்றன. இருசக்கர வாகனங்களில் பின்தொடர்பவர்கள் விழுந்து காயமடைவது மற்றும் நீண்ட நேரம் வெயிலில் காத்திருப்பவர்கள் மயக்கமடைவது போன்ற சம்பவங்களைத் தவிர்க்கவே இந்த முடிவு எனத் தெரிகிறது.
தி.நகர் போன்ற இடங்களில் 4 மணிநேரப் பிரச்சாரத்திற்கு அனுமதி கோரப்பட்ட நிலையில், ஒரு மணிநேரம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டதும், கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டதும் ரத்து செய்யப்பட்டதற்கான காரணங்களாகத் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் தரப்பில் கூறப்படுகிறது.

தங்களது தலைவரை நேரில் காணக் காலை முதலே பெரம்பூர் பகுதியில் காத்திருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள், இந்தத் திடீர் அறிவிப்பால் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர். தேர்தல் நெருங்கும் வேளையில், சொந்தத் தொகுதியாகக் கருதப்படும் பெரம்பூரிலேயே பரப்புரை ரத்து செய்யப்பட்டிருப்பது கட்சித் தொண்டர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், மற்ற மாவட்டங்களில் திட்டமிட்டபடி விஜய்யின் பிரச்சாரங்கள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
