நெகிழ்ச்சி... 60 வயதில் பள்ளிக்குச் செல்லும் பாட்டிமார்கள்... மகாராஷ்டிராவில் கல்விப் புரட்சி!

 
மூதாட்டி பள்ளி மூதாட்டி பள்ளி

"கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே" என்ற அவ்வையாரின் வாக்குக்கு இலக்கணமாக, மகாராஷ்டிரா மாநிலம் ஃபங்கானே கிராமத்தில் 60 முதல் 90 வயதுடைய பாட்டிமார்கள் உற்சாகமாகப் பள்ளிக்குச் சென்று கல்வி பயின்று வருகின்றனர். இந்த அபூர்வப் பள்ளியின் பெயர் 'அஜிபைச்சி ஷாலா'. மராத்தி மொழியில் இதற்கு 'பாட்டிமார்களின் பள்ளி' என்று பொருள்.

யோகேந்திர பங்கர் என்ற சமூக ஆர்வலரின் முயற்சியால் இப்பள்ளி தொடங்கப்பட்டது. 2016ம் ஆண்டு மார்ச் 8-ஆம் தேதி, சர்வதேச மகளிர் தினத்தன்று இந்தப் பள்ளி தனது பயணத்தைத் தொடங்கியது.

வகுப்பறை

சிறுவயதில் வறுமை அல்லது குடும்பச் சூழ்நிலை காரணமாகக் கல்வி கற்கும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பெண்களுக்கு, அவர்களின் அந்திமக் காலத்தில் எழுத்தறிவை வழங்க வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கமாகும். இந்தப் பள்ளியில் பயிலும் பாட்டிமார்கள் அனைவரும் சீருடையாகப் பிங்க் நிறப் புடவை அணிந்து வருகிறார்கள்.

வெறும் மராத்தி மொழி எழுத்துக்களை மட்டும் கற்காமல், அடிப்படை கணிதம், நீதி போதனைக் கதைகள், பாடல்கள் மற்றும் ஓவியம் வரைவதையும் ஆர்வத்துடன் கற்றுக் கொள்கிறார்கள். இந்தப் பள்ளியில் பயின்ற பல பாட்டிமார்கள் தற்போது தங்களின் பெயரைக் கையெழுத்திடவும், செய்தித்தாள்களை ஓரளவு வாசிக்கவும் கற்றுக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வகுப்பறை

"எங்கள் பேரப்பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லும்போது நாங்கள் மட்டும் ஏன் வீட்டில் இருக்க வேண்டும்?" எனக் கேட்கும் இந்தப் பாட்டிமார்களின் ஆர்வம், அக்கிராமத்தில் உள்ள இளைஞர்களிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. கல்வியறிவு பெறுவதற்கு வயது ஒரு தடையல்ல என்பதை உலகுக்கு உரக்கச் சொல்லும் ஒரு முன்மாதிரி கிராமமாக ஃபங்கானே மாறியுள்ளது.