நெகிழ்ச்சி... டெல்லியில் பசியோடு போராடும் இளைஞர்களுக்கு மும்பையிலிருந்து ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்த நபர்!

 
நீட்

நீட் தேர்வு முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்காக மும்பையைச் சேர்ந்த நபர் ஒருவர் ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்து வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் நேற்று பெய்த கனமழையையும் பொருட்படுத்தாமல் தனியார் உணவு விநியோக ஊழியர் ஒருவர், கையில் பெரிய உணவுப் பைகளுடன் போராட்டக் களத்திற்கு வந்து சேர்ந்தார். மும்பையைச் சேர்ந்த நபர் ஒருவர் ஆன்லைன் செயலிகள் மூலம் இந்த உணவுகளை ஆர்டர் செய்து, அதற்கான கட்டணத்தையும் முழுமையாகச் செலுத்தியுள்ளார்.

டெல்லி நீட்

"டெல்லியில் பசியோடு போராடிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் இந்த உணவை உடனடியாக வழங்கி விடுங்கள்" என்று அந்த மும்பை நபர் தொலைபேசியில் தன்னிடம் கேட்டுக் கொண்டதாக டெலிவரி ஊழியர் வெளியிட்ட வீடியோவில் தெரிவித்துள்ளார். இந்த நெகிழ்ச்சியான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, இணையவாசிகளின் பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது:

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, போராட்டக் களத்தில் இருக்கும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பலரும் ஆன்லைன் வாயிலாக உணவு ஆர்டர் செய்து தங்களது ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர்.