நெகிழ்ச்சி... “அப்பாவுக்காக எதையும் செய்வேன்..." நீதிமன்றத்தில் கண்ணீருடன் வாதாடி, தன் கல்லீரலின் ஒரு பகுதியைத் தானம் செய்து தந்தையின் உயிரைக் காப்பாற்றிய இளம்பெண்!
Mar 17, 2026, 10:15 IST
"பிள்ளைகள் பெற்றோருக்குச் செய்யும் ஆகச்சிறந்த கைம்மாறு இதுதான்" என்று சொல்லும் வகையில், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தனது தந்தையைக் காப்பாற்ற, 17 வயது மாணவி ஒருவர் தனது கல்லீரலின் ஒரு பகுதியைத் தானமாக வழங்கியுள்ளார். இதன் மூலமாக இந்தியாவின் மிக இளைய கல்லீரல் தானம் செய்தவர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் பிரதீஷ் (48). இவர் ஒரு சிறிய அளவிலான டிபன் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்குக் கல்லீரல் செயலிழப்பு மற்றும் கல்லீரல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. மருத்துவர்கள் உடனடியாகக் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும், இல்லையெனில் உயிர் பிழைப்பது கடினம் என்று கூறினர்.

இந்நிலையில் பிரதீஷின் 17 வயது மகள் தேவநந்தா, பிளஸ்-2 மாணவி. தனது தந்தையைக் காப்பாற்றத் தான் கல்லீரல் தானம் செய்ய முன்வந்தார். ஆனால், இந்தியச் சட்டப்படி 18 வயதுக்குக் குறைந்தவர்கள் உறுப்பு தானம் செய்ய அனுமதி இல்லை. இந்நிலையில் இது குறித்து மனம் தளராத தேவநந்தா, கேரள உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார். "என் தந்தையைக் காப்பாற்ற எனக்கு அனுமதி கொடுங்கள்" என்று அவர் கண்ணீருடன் வாதிட்டார்.
தேவநந்தாவின் பாசத்தைப் பாராட்டிய நீதிபதி பி.ஜி. அருண், ஒரு விதிவிலக்காக அவருக்குக் கல்லீரல் தானம் செய்ய அனுமதி வழங்கினார். "தேவநந்தா போன்ற குழந்தைகளைப் பெற்ற பெற்றோர் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்" என்று நீதிபதி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
தானம் செய்வதற்கு முன்பாக, தேவநந்தாவின் கல்லீரலில் கொழுப்பு இருப்பது கண்டறியப்பட்டது. தந்தையைக் காப்பாற்ற வேண்டும் என்ற வைராக்கியத்தில், கடும் உடற்பயிற்சிகள் மற்றும் உணவுக்கட்டுப்பாடுகள் மூலம் தனது கல்லீரலை ஆரோக்கியமாக மாற்றினார்.

