நெகிழ்ச்சி... கோவில் திருவிழாவில் திருடுபோன 10 சவரன் அம்மன் நகையை கண்டுபிடித்த சாமியாடிய பெண்!

 
அம்மன் நகை சாமியாடி

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த ஆர்.கே.பேட்டை தாலுகா அய்யனேரி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவின் போது, மாயமான 10 சவரன் தங்கச் செயின் அதிசயமான முறையில் மீண்டும் கிடைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அய்யனேரி திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் அனைவரும் கருவறைக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வெள்ளிக்கிழமை மதியம் கோவில் நிர்வாகத்தினர் ஆய்வு செய்தபோது, அம்மன் சிலையில் அணிவிக்கப்பட்டிருந்த 10 சவரன் தங்கச் செயின் காணாமல் போயிருந்தது தெரியவந்தது. பக்தர்களைப் போல உள்ளே புகுந்த மர்ம நபர்கள் நகையைத் திருடிச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ஆர்.கே.பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இருப்பினும் நகை கிடைக்கவில்லை.

இந்நிலையில் நேற்று மாலை கோவிலில் தீமிதி திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் வளாகத்தில் திரண்டிருந்தனர். அப்போது கோவில் பூசாரியின் மனைவியான மகேஸ்வரி என்பவருக்குத் திடீரென அருள்வந்து சாமியாடத் தொடங்கினார். "என் நகை எங்கும் போகவில்லை, இங்கு தான் உள்ளது" என்று சாமியாடியபடியே கோவிலை வலம் வந்தார்.

சாமியாடியபடி கருவறைக்குள் சென்று திரும்பிய அவரது கையில், திருடு போனதாகக் கூறப்பட்ட அம்மனின் 10 சவரன் தங்கச் செயின் இருந்தது. "என் நகை திருடு போகவில்லை, இங்கேயே தான் இருந்தது" எனக் கூறி அதை அங்கிருந்த பக்தர்களிடம் காண்பித்தார். காணாமல் போன அம்மனின் தங்க நகை மீண்டும் கிடைத்ததைக் கண்டு அங்கிருந்த பக்தர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

அம்மன் சிலையில் இருந்த நகையைத் திருடிய நபருக்கு ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்து விடுமோ என்ற பயத்தில், நகையை ரகசியமாக மீண்டும் கொண்டு வந்து போட்டிருக்கலாம் எனப் பக்தர்கள் பரவசத்துடன் தெரிவித்தனர். அதேவேளையில், சாமியாடிய பெண் நகையை எவ்வாறு துல்லியமாகக் கண்டுபிடித்தார் என்பது குறித்துச் சிலர் சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளனர். நகைக் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அய்யனேரி திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெற்று முடிந்தது.