சர்வதேச விமான எரிபொருள் விலை உயர்வு... வெளிநாட்டுப் பயணக் கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு!
ஈரான் போர் நெருக்கடி காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால், சர்வதேச விமானங்களுக்கான எரிபொருள் விலை 5 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இதன் விலை கிலோ லிட்டருக்கு 76.55 டாலர் உயர்ந்து, தற்போது 1,511.86 டாலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இரண்டாவது மாதமாக மேற்கொள்ளப்படும் இந்த விலை உயர்வு, சர்வதேச விமானப் போக்குவரத்துத் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விலை உயர்வு சர்வதேச விமான நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால், இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் பயணக் கட்டணங்கள் வரும் நாட்களில் உயரக்கூடும். விமான நிறுவனங்களின் மொத்த இயக்கச் செலவில் எரிபொருளே முக்கியப் பங்கு வகிக்கிறது. இதனால் எரிபொருள் விலை அதிகரிக்கும்போது, அந்தச் சுமையை ஈடுகட்ட விமான நிறுவனங்கள் பயணக் கட்டணத்தை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

அதே சமயம், உள்நாட்டு விமான நிறுவனங்களுக்கான எரிபொருள் விலையில் ஒன்றிய அரசு எந்த மாற்றமும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய விமான நிறுவனங்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் வகையிலும், உள்நாட்டுப் பயணிகளைப் பாதிக்காத வகையிலும் இந்த விலையை அரசு கட்டுக்குள் வைத்துள்ளது. இருப்பினும் சர்வதேச வழித்தடங்களில் பயணம் செய்பவர்களுக்கு இந்த எரிபொருள் விலை உயர்வு கூடுதல் செலவை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.
