சொந்த ஊர் செல்லத் துடிக்கும் வாக்காளர்கள்... விண்ணைத் தொட்ட விமானக் கட்டணம் !
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் விமானக் கட்டணங்கள் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளன. தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றச் சொந்த ஊர்களுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்த வாக்காளர்களுக்கு, இந்தத் திடீர் விலையேற்றம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேருந்து மற்றும் ரயில்களில் முன்பதிவு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், கடைசி நேரத்தில் விமானத்தை நாடுபவர்களிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

வழக்கமாகச் சென்னையில் இருந்து மதுரை, திருச்சி மற்றும் தூத்துக்குடி ஆகிய நகரங்களுக்குச் செல்ல 3,500 முதல் 5,000 ரூபாய் வரை மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால், தேர்தல் தேவையை முன்னிட்டு இன்று ஒரு வழிப் பயணத்திற்கு மட்டும் 12,000 ரூபாய் முதல் 15,000 ரூபாய் வரை கட்டணம் எகிறியுள்ளது. குறிப்பாக, தூத்துக்குடி மற்றும் மதுரை செல்லும் விமானங்களில் இடங்கள் மிகக் குறைவாக இருப்பதால், மீதமுள்ள சீட்களுக்குத் தனியார் நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு விலையை ஏற்றியுள்ளன.
இந்தக் கட்டண உயர்வு குறித்துப் பயணிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளதோடு, பண்டிகை மற்றும் தேர்தல் காலங்களில் இதுபோன்ற கூடுதல் வசூலைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இருப்பினும், தேவை அதிகமாக இருக்கும்போது கட்டணங்கள் உயருவது இயல்பான ஒன்றுதான் என விமான நிறுவனங்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. விமானக் கட்டணம் எட்டாக்கனியாக மாறியுள்ளதால், பலர் வேறு வழியின்றித் தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் செலுத்திப் பயணிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
