நடுவானில் உடைந்த விமான ஜன்னல்... வெளியே இழுக்கப்பட்ட பயணி ...விமானம் அவசரமாகத் தரைவிறக்கம்!

 
british

செர்பியா நாட்டைச் சேர்ந்த 61 வயது சுற்றுலா பயணி ஒருவர் தனது மனைவியுடன் கிரீஸ் நாட்டின் தெசலோனிக்கி நகரில் இருந்து ஜெர்மனியின் மெமின்ஜென் நகருக்கு விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவர் ஜன்னல் அருகே உள்ள இருக்கையிலும், அவரது மனைவி பக்கத்து இருக்கையிலும் அமர்ந்திருந்தனர். அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, திடீரென இன்ஜினில் இருந்து பிரிந்து விழுந்த ஒரு பாகம் மோதியதால் ஜன்னல் உடைந்து பயங்கர சத்தம் கேட்டது. இதனால் கேபினுக்குள் காற்றின் அழுத்தம் குறைந்து அவசர கால ஆக்சிஜன் கவசங்கள் அனைத்தும் பயணிகளின் இருக்கைகளுக்கு மேலிருந்து தானாக விழத் தொடங்கின.

அதே நேரத்தில், ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்த அந்த முதியவரின் தலை மற்றும் தோள்பட்டை பகுதி காற்றின் அதிவேக அழுத்தத்தால் ஜன்னல் வழியாக வெளியே இழுக்கப்பட்டது. இதைக் கண்டு பயந்துபோன அவரது மனைவி, உடனடியாகத் தனது கணவரைப் கெட்டியாகப் பிடித்து உள்ளே இழுக்க முயன்றார். நல்வாய்ப்பாக அவர்  சீட் பெல்ட்டை சரியாக அணிந்திருந்ததால், அவரது முழு உடலும் வெளியே இழுக்கப்படாமல் நூலிழையில் உயிர் தப்பினார். இந்த எதிர்பாராத விபரீத சம்பவத்தால் விமானத்திற்குள் இருந்த மற்ற பயணிகளிடையே மாபெரும் பயமும் பதற்றமும் நிலவியது.

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த விமான ஓட்டி, உடனடியாக அந்த விமானத்தைத் தெசலோனிக்கி விமான நிலையத்திற்கே திருப்பிச் செலுத்தி அங்கு அவசரமாகத் தரையிறக்கினார். இந்த விபத்தில் ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்த 61 வயது சுற்றுலா பயணிக்கு முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டன. விமான இன்ஜின் பாகம் உடைந்ததற்கான காரணம் குறித்து வான்வழிப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நடுவானில் ஜன்னல் உடைந்த இச்சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.