உல்லாசம்... இன்ஸ்டாவில் சொகுசு வாழ்க்கை... 20 பெண் காவலர்களை ஏமாற்றி ரூ.24 லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது!
சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் ஆடம்பரக் கார்கள் மற்றும் சொகுசு வாழ்க்கையைக் காண்பித்து, டெல்லி காவல்துறையைச் சேர்ந்த சுமார் 20 பெண் காவலர்களிடம் திருமண ஆசை வார்த்தைகள் கூறி ரூ.24 லட்சம் வரை பண மோசடியில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து வாலிபரிடம் ஏமாந்த, பாதிக்கப்பட்ட பெண் காவலர்கள் அளித்த புகாரின் பேரில், சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி குற்றவாளியைக் கைது செய்துள்ளனர்.
டெல்லியைச் சேர்ந்த விக்ராந்த் தோமர் என்ற நபர், இன்ஸ்டாகிராமில் தனது போலி கணக்குகள் மூலம் ஆடம்பரக் கார்கள், சொகுசு பங்களாக்கள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை வைத்துத் தான் ஒரு மிகப்பெரிய பணக்காரர் போன்ற பிம்பத்தை உருவாக்கியுள்ளார். விக்ராந்தின் லிவ்-இன் பெண் கூட்டாளி மூலமாக, டெல்லி காவல்துறையில் ஒரே பேட்சில் தேர்வாகிப் பணியாற்றி வரும் பெண் காவலர்களின் தொடர்பு விவரங்கள் மற்றும் தனிப்பட்டத் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

அந்தத் தகவல்களைப் பயன்படுத்தி, பெண் காவலர்களிடம் இன்ஸ்டாகிராம் மற்றும் தொலைபேசி மூலம் நெருங்கிப் பழகிய விக்ராந்த் தோமர், அவர்களைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளைக் கூறியுள்ளார். பெண் காவலர்களின் நம்பிக்கையைப் பெற்ற பிறகு, தொழில் முதலீடு மற்றும் அவசரத் தேவைகளைக் காரணம் காட்டி, சுமார் 20 பெண் காவலர்களிடமிருந்து சிறுகச் சிறுக மொத்தம் 24 லட்சம் ரூபாய் வரை பணத்தைப் பறித்துள்ளார். பணம் கொடுத்த பிறகு அவரது போக்கில் மாற்றம் ஏற்பட்டதால் சந்தேகமடைந்த பெண் காவலர்கள், தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அதிர்ச்சியடைந்தனர்.

பாதிக்கப்பட்ட பெண் காவலர்கள் உடனடியாக டெல்லி சைபர் குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய காவல்துறையினர், விக்ராந்த் தோமரை அதிரடியாகக் கைது செய்தனர். விசாரணையில், இவர் மீது ஏற்கனவே 5 பல்வேறு நிதி மோசடி வழக்குகள் நிலுவையில் இருப்பதும், அந்த வழக்குகளில் ஜாமீனில் வெளியே வந்த பிறகும் திருந்தாமல் மீண்டும் அதேபோன்று பெண் காவலர்களை இலக்காக வைத்து மோசடியில் ஈடுபட்டதும் அம்பலமாகியுள்ளது. கைதான விக்ராந்த் தோமர் மற்றும் அவருக்கு உதவிய அவரது பெண் கூட்டாளியிடம் சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
