நேபாளத்தில் பெருவெள்ளம் - பீகார் மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!
நேபாள நாட்டின் திபெத் எல்லைப் பகுதியில் (போதே கோஷி ஆற்றின் மேல்நிலைப்பகுதி) ஏற்பட்ட திடீர் பனிப்பாறை ஏரி உடைவு காரணமாக ஏற்பட்ட பெருவெள்ளம், ஆற்றின் வழித்தடங்கள் வழியாகக் கோஷி மற்றும் கண்டக் ஆறுகளில் பெருக்கெடுத்து விரைவில் பீகார் மாநிலத்தைத் தாக்கும் அபாயம் உருவாகியுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு பீகார் எல்லைப்பகுதிகளில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
கோஷி மற்றும் கண்டக் ஆற்றுப்படுகைகளில் அமைந்த சுபால், சஹர்சா, மேற்கு மற்றும் கிழக்கு சம்பாரண், கோபால்கஞ்ச் உள்ளிட்ட மாவட்டங்களின் அதிகாரிகளுக்குத் தலைமைச் செயலாளர் பிரத்யய் அம்ரித் 24 மணி நேரத் தீவிர கண்காணிப்புக்கு உத்தரவிட்டுள்ளார்.

கரையோரங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்களைப் பாதுகாப்பான முகாம்கள் மற்றும் பள்ளிகளுக்கு அப்புறப்படுத்தும் பணிகள் உடனடியாகத் தொடங்கப்பட்டுள்ளன.
தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை குழுக்கள் அவசரகால மீட்புப் பணிகளுக்காக எல்லைப் பகுதிகளில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் எல்லை பாதுகாப்புப் படையான எஸ்.எஸ்.பி 11 அவசர மீட்புக் குழுக்களைத் தயார்படுத்தியுள்ளது.

நீர்வரத்துத் திடீரென அதிகரிப்பதால் அணை மதகுகளுக்கு அழுத்தம் ஏற்படுவதைத் தடுக்க, கண்டக் வல்மீகிநகர் அணை மற்றும் கோஷி பேரேஜின் அனைத்து கதவுகளும் கட்டம் கட்டமாகத் திறக்கப்பட்டு நீரைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
