"முதலில் உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள்!" - டிரம்புக்கு மெலோனி பதிலடி - முற்றிய வார்த்தைப்போர்!

 
ட்ரம்ப் டிரம்ப் மெலோனி

ஒரு காலத்தில் சர்வதேச அரசியல் அரங்கில் மிகவும் நெருங்கிய கூட்டாளிகளாகக் கருதப்பட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி ஆகிய இருவருக்கும் இடையேயான ராஜதந்திர உறவு தற்போது முற்றிலும் சிதைந்து, சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் பகிரங்க வார்த்தைப்போராக வெடித்துள்ளது.

பிரான்சில் அண்மையில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டிற்குப் பிறகு, இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையே குரோத மனப்பான்மை அதிகரித்துள்ளது.  இத்தாலியில் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் மக்கள் செல்வாக்குத் தொடர்ந்து சரிந்து வருவதாகவும், அதனைச் சரிசெய்து தனது செல்வாக்கை மீட்டெடுப்பதற்காக மாநாட்டின் போது தன்னுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொள்ள மெலோனி கெஞ்சியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருந்தார்.

இத்தாலி பிரதமர் மெலோனி

டிரம்ப்பின் இந்த விமர்சனத்திற்கு அப்போதே கடுமையான பதிலடி கொடுத்த மெலோனி, டிரம்ப் கூறியது அப்பட்டமான பொய் என்றும், இத்தாலியோ அல்லது தனிப்பட்ட முறையில் நானோ யாரிடமும் எதற்காகவும் கெஞ்ச வேண்டிய அவசியமில்லை என்றும் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரு நாடுகளுக்கும் இடையேயான ராணுவ ஒத்துழைப்பு விவகாரத்தைக் கையில் எடுத்து மெலோனியை மீண்டும் வம்பிழுத்துள்ளார்: இத்தாலியில் உள்ள ராணுவ விமான ஓடுதளங்களை அமெரிக்கப் படைகள் பயன்படுத்துவதற்குப் பிரதமர் மெலோனி அனுமதி மறுத்து விட்டார் என்றும், தற்போது அமெரிக்காவுடன் மீண்டும் இணக்கமான உறவை ஏற்படுத்திக் கொண்டு இத்தாலியில் சரிந்துள்ள தனது அரசியல் செல்வாக்கை உயர்த்திக் கொள்ளவே அவர் முயன்று வருகிறார் என்றும் டிரம்ப் மீண்டும் கடுமையாக குற்றம் சாட்டினார்.

மோடி மெலோனி

டிரம்ப்பின் இந்தத் தொடர் அரசியல் அத்துமீறல்களுக்குப் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி தற்போது பதிலடி கொடுத்துள்ளார். அதில், "அமெரிக்க அதிபரான உங்களின் நட்பு எந்த விதத்திலும் என் நாட்டின் செல்வாக்கையோ அல்லது என் தனிப்பட்ட அரசியல் செல்வாக்கையோ உயர்த்தப் போவதில்லை. இத்தாலி நாட்டின் இறையாண்மையையும் ஒட்டுமொத்த மக்களின் நலனையும் காப்பதில் தான் என் செல்வாக்கு அடங்கியுள்ளது. எனவே, என்னைப் பற்றியும் என் நாட்டின் செல்வாக்கைப் பற்றியும் உங்களுக்கு எவ்விதக் கவலையும் வேண்டாம்; அமெரிக்க அதிபராக முதலில் உங்கள் நாட்டில் உள்ள உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள்" என மெலோனி ஆவேசமாகப் பதிலடி கொடுத்துள்ளார்.

சர்வதேச அளவில் அமெரிக்கா - ஈரான் இடையேயான பதற்றத்தை விடவும், தற்போது டிரம்ப் - மெலோனி இடையே முற்றியுள்ள இந்த வார்த்தைப்போர் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ அமைப்புகளின் பாதுகாப்பு கூட்டணிகளிடையே பெரும் விரிசலையும் அரசியல் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.