"விதிமுறைகளைப் பின்பற்றுங்கள்" - ராகுல் காந்தியின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து மத்திய அமைச்சர் எச்சரிக்கை!

 
ராகுல் காந்தி ராகுல் காந்தி

நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தனது வெளிநாட்டுப் பயணங்கள் குறித்த விவரங்களை முன்கூட்டியே அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ அறிவுறுத்தியுள்ளார். இது சட்ட விதிமீறல்கள் அல்லது தேவையற்ற நடைமுறைச் சிக்கல்களைத் தவிர்க்க உதவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பயண விதிமுறைகளைச் சுட்டிக்காட்டிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் சட்டத்திற்குட்பட்டவர்கள் என்பதை வலியுறுத்தினார். எந்தவொரு எம்பியும் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்ய விரும்பினால், அதுகுறித்த தகவலை 3 வாரங்களுக்கு முன்பே மக்களவை அல்லது மாநிலங்களவைச் செயலகத்திற்குத் தெரிவிக்க வேண்டும். அனுமதிக்கானதல்ல, தகவலுக்காக: எம்பிக்கள் வெளிநாடு செல்வதற்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால் பாதுகாப்பு மற்றும் நெறிமுறைகளின்படி இந்தத் தகவலை முன்கூட்டியே வழங்குவது அவசியமாகும்.

ராகுல்

ராகுல் காந்தியின் பயணங்கள் மற்றும் அதற்கான செலவுகள் குறித்து எழுந்துள்ள கேள்விகள் மிகவும் தீவிரமானவை என்று குறிப்பிட்ட அமைச்சர், வெளிநாட்டு உபசரிப்பு: வெளிநாடுகளில் உள்ள அமைப்புகள் அல்லது முகமைகளின் உபசரிப்பை ஏற்கும் போது, வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின் (FCRA 2010 - பிரிவு 6) கீழ் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும், வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கும் எம்பிக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும்.

தெரியப்படுத்தாமல் வெளிநாட்டு உபசரிப்புகளை ஏற்றால், அதற்குரிய அபராத நடவடிக்கைகள் சட்டத்தில் உள்ளன. வருமானத்திற்கு அதிகமாகச் செலவு செய்திருந்தால் அது வருமான வரித்துறையின் விதிகளுக்கு உட்பட்டது.

ராகுல் காந்தி

ராகுல் காந்தியின் அண்மைக்கால ஓமன் (மஸ்கட்), தாய்லாந்து மற்றும் வியட்நாம் பயணங்களைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், "எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ராகுல் காந்தி, தன்னை அழைத்தவர்கள் யார், வெளிநாடுகளில் தனக்காகச் செலவு செய்த முகமைகள் எவை என்ற விவரங்களை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்.

விதிமுறைகளைப் பின்பற்றாமல் இருந்துவிட்டு, நாளை ஏதேனும் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால், மத்திய அரசு பழிவாங்குகிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டக் கூடாது" என்று கிரண் ரிஜிஜூ எச்சரித்துள்ளார். முன்னதாக, கடந்த 22 ஆண்டுகளில் ராகுல் காந்தி மேற்கொண்ட 54 வெளிநாட்டுப் பயணங்களின் செலவுகள் மற்றும் அவரது அறிவிக்கப்பட்ட வருமானத்திற்கு இடையே முரண்பாடுகள் இருப்பதாகப் பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.