வாகனங்களை தீவைத்து கொளுத்திய கால்பந்து ரசிகர்கள்... கொண்டாட்டத்தில் 400-க்கும் மேற்பட்டோர் கைது!

 
பாரிஸ் பாரிஸ்

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் ஆர்சனல் அணியை வீழ்த்தி பிஎஸ்ஜி அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைத் தங்களின் சொந்த ஊரான பாரிஸ் நகரில் கொண்டாடுவதற்காகப் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் வீதிகளில் திரண்டனர். அப்போது ரசிகர்களில் ஒரு பகுதியினர் பொதுமக்களுக்கும் சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கும் வகையில் வன்முறையில் ஈடுபடத் தொடங்கினர்.

வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பொது இடங்களில் பட்டாசுகளை வெடித்தும், கடைகளின் கண்ணாடிகளை உடைத்தும் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. வாகனங்களுக்குத் தீ வைக்கப்பட்டதோடு, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மீதும் கற்கள் மற்றும் பாட்டில்களை வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. நிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து, கூட்டத்தைக் கலைப்பதற்காகக் காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளைப் பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது.

பாரிஸ் நகரம் முழுவதும் விடிய விடிய நடைபெற்ற இந்த மோதல்களின் முடிவில், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்த 400-க்கும் மேற்பட்ட ரசிகர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த வன்முறைச் சம்பவங்களில் பல காவல்துறையினரும், பொதுமக்களும் காயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கால்பந்து போட்டியின் வெற்றிக் கொண்டாட்டம் வன்முறையாக மாறிய இந்தச் சம்பவம் பிரான்ஸ் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.