கால்பந்து விளையாடியபோது மின்னல் தாக்கி மைதானத்திலேயே வீரர் பலி... நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ!

 
football

தென் தாய்லாந்தில் உள்ள சுங்கை கோலோக் பகுதியில் அமைந்துள்ள சன்டிபாப் விளையாட்டரங்கில் சாம்கொல்ட்ஸ் மற்றும் அபு எக்ஸ் நொங் சிரின் அணிகளுக்கு இடையே விறுவிறுப்பான கால்பந்து போட்டி நடைபெற்று வந்தது. போட்டி மும்முரமாக நடந்து கொண்டிருந்தபோது அப்பகுதியில் திடீரெனப் பெய்த மழையின் இடையே பயங்கரமான மின்னல் ஒன்று மைதானத்திற்குள் இறங்கியது. இந்த விபத்தில் சாம்கொல்ட்ஸ் அணியின் 24 வயது வீரரான சோவ்யான் அவேய் மீது அந்த மின்னல் தாக்கியது.

மின்னல் தாக்கிய வேகத்தில் நிலைகுலைந்த அவர் மைதானத்திலேயே சுருண்டு விழுந்ததைக் கண்டு அங்கிருந்த சக வீரர்களும் பார்வையாளர்களும் கடும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாகச் செயல்பட்ட சக வீரர்களும் அவசர மருத்துவக் குழுவினரும் அவரை மீட்டு காப்பாற்றும் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். இந்த மின்னல் விபத்தில் கால்பந்து வீரர் ஒருவர் உட்பட மொத்தம் 12 பேர் படுகாயங்களுடன் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காயமடைந்தவர்களுக்குத் தீவிர சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன. கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது கண் இமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்த விபத்து அப்பகுதியில் உள்ள விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.