இந்திய மாணவர்களுக்குப் பேரிடி... அமெரிக்காவில் படித்து, அங்கேயே பணிபுரிய ரூ.1 கோடி கட்டணம்? டிரம்ப் நிர்வாகம் பரிசீலனை!

 
ட்ரம்ப்

அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை முடித்த பிறகு அந்நாட்டிலேயே தங்கிப் பணியாற்ற விரும்பும் சர்வதேச மாணவர்களுக்கு 1 லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.95 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை) கட்டணம் விதிக்கும் புதிய திட்டத்தைத் டிரம்ப் நிர்வாகம் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.

அமெரிக்காவில் உயர்கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்கள், படிப்பை முடித்ததும் தற்காலிகமாக 1 முதல் 3 ஆண்டுகள் வரை அங்கேயே வேலை செய்ய ஆப்ஷனல் பிராக்டிகல் டிரெயினிங் திட்டம் அனுமதிக்கிறது: இந்தச் சலுகையைப் பயன்படுத்திப் பணியாற்ற விரும்பும் மாணவர்களுக்கே இந்த $100,000 கட்டணத்தைச் சுமத்த உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்கா உயர்கல்வி விசா மாணவர்கள் பட்டம்

அமெரிக்காவில் பயிலும் சர்வதேச மாணவர்களில் கணிசமான பகுதியினர் (சுமார் 48%) இந்தியர்கள் என்பதால், இத்திட்டம் அமலுக்கு வந்தால் இந்திய மாணவர்களே பெருமளவில் பாதிக்கப்படுவர். முன்னதாக, வெளிநாட்டுப் பணியாளர்களை அழைத்து வரும் எச்-1பி விசா விண்ணப்பங்களுக்கு $100,000 கட்டணம் விதிக்க டிரம்ப் நிர்வாகம் முயற்சித்தது. இந்த எச்-1பி விசா கட்டண உயர்வுக்கு அமெரிக்கக் கூட்டாட்சி மேல்முறையீட்டு நீதிமன்றம் அண்மையில் தடை விதித்தது.

எச்-1பி விசா கட்டண முயற்சி நீதிமன்றத்தில் முடங்கியதைத் தொடர்ந்து, அதற்கு மாற்றாக மாணவர்கள் பயன்பாட்டில் உள்ள OPT வேலை அனுமதித் திட்டத்தின் மீது அதே தொகையைக் கட்டணமாக விதிக்க டிரம்ப் அரசு ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது.

எச்1-பி' விசா அறிவிப்பு அமெரிக்கா

சர்வதேச மாணவர்கள் செலுத்தும் கட்டணத்தையே பல அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் தங்கள் பிரதான வருவாயாக நம்பியுள்ளன. இக்கட்டண உயர்வால் வெளிநாட்டு மாணவர்கள் வருகை கணிசமாகக் குறையலாம் எனக் கல்லூரிகள் கவலை தெரிவிக்கின்றன. கூகுள், மைக்ரோசாப்ட், மெட்டா போன்ற முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் OPT மூலம் தகுதியான இந்திய மற்றும் சர்வதேசப் பட்டதாரிகளையே முதன்மையாக வேலைக்கு அமர்த்துகின்றன.

தற்போது வரை இத்திட்டம் ஆலோசனைக் கட்டத்திலேயே உள்ளது என்றும், அதிகாரப்பூர்வமாக இறுதி அறிவிப்பு எதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை என்றும் வெள்ளை மாளிகை மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.