சீனியர்களுக்கு கல்தா... துரைமுருகனுக்கு 'நோ' அமைச்சர் பதவி? - திமுகவில் பரபரப்பு!
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக வேட்பாளர் பட்டியல் தயாராகி வரும் நிலையில், கட்சியின் மூத்த தலைவரான துரைமுருகன் அவர்களுக்கு இந்த முறை அமைச்சர் பதவி வழங்கப்படாது என்ற தகவல் அறிவாலய வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
87 வயதாகும் துரைமுருகன், சமீபத்தில் வீட்டில் தவறி விழுந்ததில் முதுகுத் தண்டில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையிலும், அதன் பின்னர் வீட்டில் நீண்ட நாட்கள் ஓய்விலும் இருந்தார். அவரது உடல்நிலை மற்றும் தள்ளாத வயதைக் கருத்தில் கொண்டு, அவருக்குத் தேர்தல் ஓய்வு அளிக்கக் கட்சித் தலைமை ஆலோசித்து வந்தது.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் துரைமுருகனை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, "கடைசியாக இந்த ஒருமுறை மட்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்புத் தாருங்கள்" எனத் துரைமுருகன் தனது விருப்பத்தை முன்வைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நீண்ட விவாதத்திற்குப் பிறகு, அவருக்கு மீண்டும் காட்பாடி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் எனத் தெரிகிறது. ஆனால், ஒரு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவாலயம் வட்டாரம் தகவல் கசிகிறது.
திமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் பட்சத்தில், துரைமுருகனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட மாட்டாது என்றும், அவர் வழிகாட்டியாக மட்டுமே இருப்பார் என்றும் கூறப்படுகிறது. இம்முறை அதிகளவில் இளைஞர்களுக்கு அமைச்சர் பதவி வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். விரைவில் உதயநிதியை முதல்வராக்கி அமர வைக்கும் போது, உதயநிதிக்கு உதவியாக இளைஞர் பட்டாளம் இம்முறை களமிறங்க வேண்டும் என்றும், திமுக தலைவர் ஸ்டாலின், ஓய்வெடுக்கும் பொருட்டு, கட்சியைப் பார்த்துக் கொள்வது என்றும், ஆட்சியை உதயநிதி கவனிக்கட்டும் என்கிற திட்டமும் வகுக்கப்பட்டிருக்கிறதாம். கடந்த 2021ம் ஆண்டு தேர்தலில் காட்பாடி தொகுதியில் 1,000 வாக்குகளுக்கும் குறைவான மிகக் குறைந்த வித்தியாசத்திலேயே அவர் வெற்றி பெற்றார். மேலும், புது ரத்தம் பாய்ச்சும் நோக்கில் இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கக் கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளது. அதே போன்று இம்முறை பொன்முடிக்கும் அமைச்சர் பதவி கிடைக்காது என்கிறார்கள்.

ராணிப்பேட்டை மற்றும் காட்பாடி தொகுதிகளில் இருந்து இதுவரை 10 முறை சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 1996 முதல் தொடர்ச்சியாக வெற்றி பெற்று, கருணாநிதி மற்றும் ஸ்டாலின் அமைச்சரவைகளில் முக்கியத் துறைகளை (பொதுப்பணி, நீர்வளம்) கவனித்து வந்தவர். அமைச்சர் பதவி கிடையாது என்ற தகவல் குறித்துத் துரைமுருகன் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தப் பதிலும் அளிக்கவில்லை. எனினும், வேட்பாளர் பட்டியல் வெளியாகும் போதுதான் அவருக்கு மீண்டும் சீட் வழங்கப்படுகிறதா அல்லது கௌரவப் பதவிகள் வழங்கப்படுமா என்பது உறுதியாகும்.
