தொடர்ந்து 3வது முறை... உலகக் கோப்பைப் போட்டிக்கு நேரடியாக நுழையும் தகுதி வாய்ப்பை இழந்தது வெஸ்ட் இண்டீஸ்!

 
வெஸ்ட் இண்டீஸ்

14-வது 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2027 அக்டோபர் 4 முதல் நவம்பர் 21 வரை தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ள நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி நேரடியாகத் தகுதி பெறும் வாய்ப்பை இழந்துள்ளது.

தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகள் போட்டியை நடத்துவதன் அடிப்படையில் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன. செப்டம்பர் 30ம் தேதி நிலவரப்படி ஐ.சி.சி ஒருநாள் தரவரிசையில் முதல் இடங்களில் இருக்கும் அணிகள் நேரடியாகத் தகுதி பெறும். நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து, வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்பது உறுதியாகியுள்ளது.

T20 உலக கோப்பை கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு

ஒருநாள் தரவரிசையில் 10-வது இடத்தில் இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி, நேரடியாகத் தகுதி பெறும் வாய்ப்பை அதிகாரப்பூர்வமாக இழந்துள்ளது. செப்டம்பர் மாத இறுதியில் இந்தியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்றாலும், தரவரிசைப் புள்ளிகள் அடிப்படையில் வெஸ்ட் இண்டீஸ் அணியால் நேரடித் தகுதிப் பட்டியலுக்குள் முன்னேற முடியாத சூழல் உருவாகியுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணி 2027 உலகக் கோப்பையில் விளையாட வேண்டுமெனில், அடுத்த ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெறும் தகுதிச்சுற்றுப் போட்டிகளில் பங்கேற்க வேண்டும். 2019 மற்றும் 2023 உலகக் கோப்பைகளைத் தொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸ் அணி தொடர்ந்து 3-வது முறையாகத் தகுதிச்சுற்று வழியாகப் பயணிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இருமுறை உலகக் கோப்பையை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, 2023-ஆம் ஆண்டு தகுதிச்சுற்றில் தோல்வியடைந்து வரலாற்றிலேயே முதன்முறையாக பிரதான உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்து அதிர்ச்சியளித்தது.