18 ஆண்டுகளில் முதன்முறையாக கம்யூனிஸ்ட் அல்லாத ஒருவர் பதவியேற்பு.. நேபாள சபாநாயகராக டி.பி. ஆரியால் போட்டியின்றித் தேர்வு!

 
நேபாள் டி.பி.ஆரிலால் நேபாள் டி.பி.ஆரிலால்

நேபாளத்தின் 4-வது உயரிய பதவியாகக் கருதப்படும் நாடாளுமன்றச் சபாநாயகர் பதவிக்கு, ராஷ்டீரிய சுதந்திரா கட்சியைச் சேர்ந்த டோல் பிரசாத் ஆரியால் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நேற்று இதற்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்த டி.பி. ஆரியாலுக்கு, அக்கட்சியின் தலைவர் ரபி லமிசானே மற்றும் அமைச்சர்கள் ஸ்வர்னிம் வாகலே, சோபிதா கவுதம் உள்ளிட்டோர் முழு ஆதரவு தெரிவித்தனர். எதிர்க்கட்சிகள் யாரும் வேட்பாளரை நிறுத்தாததால், அவர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

நேபாள் முன்னாள் பிரதமர் கைது

1974-ல் மைதி நகரில் பிறந்த ஆரியாலின் வாழ்க்கை வரலாறு பலருக்கும் ஒரு உந்துதலாக அமைந்துள்ளது. 1992-ல் வேலை தேடி காத்மண்டு வந்த இவர், ஒரு சாதாரண உணவு விடுதியில் தொழிலாளியாகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் சுற்றுலா வழிகாட்டியாகப் பணியாற்றினார்.

கல்வி மற்றும் வேலைக்காக ஜப்பான் சென்ற இவர், அங்குப் பல அனுபவங்களைப் பெற்றார். கல்வி, சுற்றுலா மற்றும் தொழில் துறைகளில் ஆர்வம் காட்டிய இவர், நேபாளம் திரும்பியதும் அரசியலில் தடம் பதித்தார். ராஷ்டீரிய சுதந்திரா கட்சி தொடங்கப்பட்ட மூன்றரை ஆண்டுகளிலேயே அதன் மத்திய உறுப்பினர் மற்றும் துணைத் தலைவராக உயர்ந்தார். இதற்கு முன்பு, நேபாளத்தின் தொழிலாளர் மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறை அமைச்சராக இரண்டு முறை பதவி வகித்துள்ளார்.

நேபாள் பிரதமர் பாலேந்திர ஷா

கடந்த 18 ஆண்டுகளில் நேபாளச் சபாநாயகர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கம்யூனிஸ்ட் அல்லாத தலைவர் இவரே ஆவார். நேபாளக் கீழவையின் 10-வது சபாநாயகராக இவர் பொறுப்பேற்றுள்ளார்.

நேபாளப் பிரதமர் கே.பி. சர்மா ஒலி ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில், ராஷ்டீரிய சுதந்திரா கட்சி பெரும் வெற்றி பெற்றது. இதில் புகழ்பெற்ற ராப் பாடகரான பாலேந்திர ஷா (Balen Shah) பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், தற்போது அதே கட்சியைச் சேர்ந்த ஆரியால் சபாநாயகராகியுள்ளார். இது அந்நாட்டு அரசியலில் இளைஞர்கள் மற்றும் புதிய கட்சிகளின் ஆதிக்கத்தை உறுதிப்படுத்தியுள்ளது.