"விசுவாசத்திற்கு கட்டப்பா.. துரோகத்திற்கு எடப்பாடி!" - முதல்வர் ஸ்டாலின் ஆக்ரோஷம்!
விருதுநகர் மாவட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக கூட்டணியை இலக்கு வைத்து அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைத்தார்.
பிரபல 'பாகுபலி' திரைப்பட வசனத்தைக் குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமியைச் சாடிய முதல்வர், "பாகுபலி படத்தில் சத்யராஜைப் பார்த்து, விசுவாசத்திற்கு ஒரு உருவம் இருந்தால் அது நீதான் கட்டப்பா என்று கூறுவார்கள். அதைப்போல, துரோகத்திற்கு ஒரு உருவம் கொடுத்தால் அது எடப்பாடி பழனிசாமிதான். ஜெயலலிதாவுக்கே துரோகம் செய்துவிட்டுப் பாஜகவுடன் கூட்டணி வைத்தவர் அவர்."

"எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தற்போது 'பியூஸ் போன சாமி' ஆகிவிட்டார். அவர் செய்த துரோகங்களை எண்ண முடியாது, ஆனால் அவரது தோல்விகளை எண்ணிவிடலாம்," என விமர்சித்தார்.
எடப்பாடி பழனிசாமியின் பிரசார நடைமுறை குறித்துப் பேசிய முதல்வர், "பழனிசாமி என்றாலே பொய் மற்றும் பித்தலாட்டம்தான். சங்கிக் கூட்டணியில் சேர்ந்த பிறகு, அவர்களைப் போலவே வாட்ஸ்-அப் வதந்திகளை மேடைகளில் வாந்தியெடுத்து வருகிறார். அவர் சொல்லும் பொய்களைத் தொகுத்தால் ஒரு புத்தகமே போடலாம்."
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் குறித்து எடப்பாடி பழனிசாமி அவதூறுகளைப் பரப்புவதாகவும், ஒரு பொய்யை மறைக்க அடுத்தடுத்துப் பொய்களைக் கூறி வருவதாகவும் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

விருதுநகர் மண்ணின் சிறப்புகளைப் பட்டியலிட்ட முதல்வர், அங்குள்ள கூட்டணி வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரித்தார். "என் ஆருயிர் நண்பர் கேப்டன் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரனுக்கு 'முரசு' சின்னத்தில் வாக்களியுங்கள். சினிமாவில் விஜயகாந்திற்காக வாக்கு கேட்ட நான், இன்று நேரில் அவர் மகனுக்காக வாக்கு கேட்கிறேன்."
நிர்வாகத் திறமை மிக்க அமைச்சர்களான அமைச்சர்கள் தங்கம் தென்னரசு & கே.கே.எஸ்.எஸ்.ஆர் போன்றவர்களை மக்கள் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். சாத்தூர் (கடற்கரை ராஜ்), ராஜபாளையம் (தங்கபாண்டியன்), சிவகாசி (கணேசன் அசோகன்), ஸ்ரீவில்லிபுத்தூர் (மகாலிங்கம்) ஆகியோருக்கும் ஆதரவு கோரினார்.
"சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்" என்ற பாடலைச் சுட்டிக்காட்டிய முதல்வர், திமுகவின் தேர்தல் அறிக்கையே இந்தத் தேர்தலின் 'சூப்பர் ஸ்டார்' என்றும், அதன் சிறப்பம்சங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்றும் தொண்டர்களைக் கேட்டுக்கொண்டார்.
