“ஒருவரை மதம் மாற வற்புறுத்துவது மத நம்பிக்கையை அவமதிப்பது ஆகாது” - உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
மதம் மாறுமாறு ஒருவரை வற்புறுத்துவதோ, ஆசைவார்த்தை கூறுவதோ, இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் மத உணர்வுகளையோ அல்லது மத நம்பிக்கைகளையோ அவமதிக்கும் குற்றமாகாது எனக் கூறி, நான்கு பேர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியைச் சேர்ந்த ஜோசப் குடாவந்த், அவரது மகன் விக்டர் குடாவந்த், மருமகள் எல்வினா குடாவந்த் மற்றும் சமூக ஆர்வலர் ஆனந்த் மங்கர் ஆகிய நான்கு பேர் மீது அப்பகுதியைச் சேர்ந்த தம்பதி, சட்டவிரோதமாக மதமாற்றம் செய்ய முயன்றதாகக் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் காவல்துறையினர் அவர்கள் நான்கு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர். தன் மீதான இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் மும்பை உயர்நீதிமன்ற நாக்பூர் கிளையில் மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த மனு நீதிபதி சந்த்வானி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "புகார்தாரர் மற்றும் அவரது குடும்பத்தினர் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால் அவர்களுக்கு மாதம் தோறும் பண உதவி, குழந்தைகளின் கல்விச் செலவு ஏற்பு மற்றும் இலவசமாக வீடு கட்டித் தருவதாக ஆசைவார்த்தை கூறி மத உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளனர்" என வாதிட்டார்.
ஆனால் மனுதாரர்கள் தரப்பில், "யாருடைய மத உணர்வுகளையும் புண்படுத்தும் நோக்கமோ அல்லது எந்தவொரு மதத்தையும் அவமதிக்கும் எண்ணமோ மனுதாரர்களுக்கு இல்லை" என்று வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி சந்த்வானி, மனுதாரர்கள் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்து தீர்ப்பளித்தார். தனது உத்தரவில், "இந்த வழக்கில் புகார்தாரரையும் அவரது மனைவியையும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறுமாறு மனுதாரர்கள் வற்புறுத்தினார்கள் என்பது மட்டுமே பிரதான குற்றச்சாட்டாக உள்ளது. ஆனால் அவர்கள் எந்த மத நம்பிக்கையையும் அவமதிக்கவோ அல்லது புண்படுத்தவோ இல்லை. வெறும் மதமாற்ற வற்புறுத்தல் என்பது மத உணர்வுகளை அவமதிப்பதாகக் கருத முடியாது" என்று நீதிபதி தெளிவுபடுத்தினார்.
மகாராஷ்டிராவில் சட்டவிரோத மதமாற்றத் தடைச் சட்டம் 2026-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28 முதல் நடைமுறையில் உள்ள சூழலில், நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புச் சட்ட வட்டாரங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
