இந்தியப் பங்குச்சந்தையில் ரூ.45,960 கோடி முதலீடு செய்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!
தொடர் விற்பனையில் ஈடுபட்டு வந்த வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் , மீண்டும் இந்தியப் பங்குச்சந்தைகளில் அதிக அளவில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். கடந்த ஒரே வாரத்தில் மட்டும் ரூ.45,960 கோடியை அவர்கள் இந்தியப் பங்குகளில் முதலீடு செய்துள்ளனர்.
முன்னதாக, அக்டோபர் மாதத்தில் மட்டும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சுமார் ரூ.45,162 கோடியை இந்தியச் சந்தையிலிருந்து வெளியே எடுத்திருந்தனர். கடந்த 10 வாரங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து பங்குகளை விற்பனை செய்து வந்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள், தற்போது மீண்டும் இந்தியச் சந்தையை நோக்கித் திரும்பியுள்ளது பங்குச்சந்தை வர்த்தகர்களுக்குப் பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது.

கடந்த வாரத்தின் 5 வர்த்தக தினங்களிலும் தொடர்ச்சியாகப் பங்குகளைக் கொள்முதல் செய்ததன் மூலம், ஒரே வாரத்தில் ரூ.45,960 கோடி மதிப்பிலான முதலீடுகள் இந்திய ஈக்விட்டி சந்தைக்குள் வந்துள்ளன. வெளிநாட்டு முதலீட்டாளர்களின் இந்த திருப்பத்திற்குச் சர்வதேச மற்றும் உள்நாட்டு ரீதியிலான சில முக்கிய அம்சங்கள் காரணமாகச் சுட்டிக்காட்டப்படுகின்றன.
சர்வதேச அளவில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகளில் ஏற்பட்ட தற்காலிகச் சரிவு மற்றும் நிச்சயமற்ற தன்மை காரணமாக, சர்வதேச முதலீட்டாளர்கள் தங்களது கவனத்தை இந்திய நிறுவனங்களின் பக்கம் திருப்பியுள்ளனர்.
இந்திய நிறுவனங்களின் இரண்டாம் காலாண்டு நிதிநிலை அறிக்கைகள் மற்றும் வருவாய் முடிவுகள் வலுவாக அமைந்திருப்பதும் முதலீட்டாளர்களைக் கவர்ந்துள்ளது.

குறிப்பாகப் வங்கி மற்றும் நிதிச் சேவைகள், தகவல் தொழில்நுட்பம், வாகன உற்பத்தி மற்றும் தொலைத்தொடர்பு ஆகிய துறைகளின் முன்னணி பங்குகளையே வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிக அளவில் வாங்கியுள்ளனர்.
வெளிநாட்டு முதலீட்டாளர்களின் இந்த வலுவான வருகையால் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை கணிசமான உயர்வைக் கண்டு சந்தையில் மீண்டும் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளன.
