யானைகள் நடமாட்டத்தால் குறிஞ்சி மலர்களைப் பார்வையிட வனத்துறை தடை.. நீலகிரியில் குவியும் சுற்றுலா பயணிகள்!
நீலகிரி மாவட்டம் கூடலூர் வனப்பகுதிகளில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் அரிய வகை குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்கும் நிலையில், வனவிலங்குகள் பாதுகாப்பு கருதி பொதுமக்கள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.
சங்க இலக்கிய சிறப்புமிக்க, அறிவியல் பூர்வமாக 'ஸ்டிராபிலாந்தஸ் குந்தியானா' என்று அழைக்கப்படும் குறிஞ்சி மலர்கள் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் இயல்புடையவை.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள நாடு காணி, ஓவேலி மற்றும் நடுவட்டம் ஊசிமலை காட்சி முனை வனப்பகுதிகளில் தற்போது குறிஞ்சி மலர்கள் மலை முழுவதும் நீல நிறப் போர்வை போர்த்தியது போலப் பூத்துக் குலுங்குகின்றன.இந்த அரிய நிகழ்வைக் காண உள்ளூர் பொதுமக்கள் மட்டுமின்றி, பக்கத்து மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கூடலூர் பகுதிக்கு வரத் தொடங்கியுள்ளனர்.
ஓவேலி மலைத் தொடரின் கடைக்கோடி அடர்ந்த வனப்பகுதியில் குறிஞ்சி பூக்கள் பூத்துள்ளதால், அப்பகுதியில் காட்டு யானைகள் மற்றும் பிற வனவிலங்குகளின் நடமாட்டம் மிக அதிகமாக உள்ளது. பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு, சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் குறிஞ்சிப் பூக்கள் பூத்துள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் நேரில் செல்ல வேண்டாம் என வனத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவுறுத்தியுள்ளது.
அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும், வனவிலங்குகளின் அசைவுகளைக் கண்காணிக்கவும் வனச்சரக ஊழியர்கள் அப்பகுதியில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
