1,00,000 ஹெக்டேர் காடுகள் கருகி நாசம்... இந்தோனேசியாவில் காட்டுத் தீயால் பள்ளிகள் மூடல்!
இந்தோனேசியாவில் எல் நினோ காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சி காரணமாக நாடு முழுவதும் ஒன்று லட்சத்து ஏழாயிரம் ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவு காடுகள் காட்டுத்தீயால் எரிந்து கருகியது. இந்த ஆண்டின் முதல் பாதியிலேயே தீ விபத்துகள் கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாக இந்தோனேசிய வனத்துறை அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவசர கால நிலவரங்களும் அமல்படுத்தப்பட்டுள்ளன.
கிழக்கு ஜாவாவில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான புரோமோ எரிமலை தேசியப் பூங்காவில் கடந்த ஒன்பது நாட்களாக எரிந்து வந்த பெருந்தீயில் ஐந்நூற்று ஐம்பது ஹெக்டேர் புல்வெளிகள் கருகி சாம்பலாகின. இதனால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்காக அந்தப் பூங்கா தற்காலிகமாக முழுமையாக மூடப்பட்டுள்ளதுடன் வெளியூர் மக்கள் யாரும் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜாம்பி, தெற்கு சுமத்ரா மற்றும் கலிமந்தன் உள்ளிட்ட ஆறு மாகாணங்கள் இந்த விபத்தினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மேற்கு கலிமந்தனின் போந்தியானாக் நகரில் அடர்ந்த நச்சுப் புகைமூட்டம் சூழ்ந்துள்ளதால் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தீயை அணைக்கும் பணிகளில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
