போலி ஆவணம் தயாரித்து ரூ. 35 லட்சம் மோசடி - தம்பதி உட்பட 4 பேர் கைது!
சென்னையில் பிரபல தனியார் நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்திப் போலியான ஆவணங்கள் தயாரித்து, பிற நிறுவனங்களிடம் இருந்து சுமார் 35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களைக் கொள்முதல் செய்து மோசடி செய்த வழக்கில் ஒரு தம்பதி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையில் இயங்கி வரும் ஒரு பிரபல தனியார் நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிட்டு, அதன் லெட்டர் பேட் மற்றும் முத்திரைகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களைப் போலியாக இந்த கும்பல் தயாரித்துள்ளது.

இந்த போலி ஆவணங்களைக் காண்பித்து, சந்தையில் உள்ள பிற வர்த்தக நிறுவனங்களை நம்ப வைத்து, அவர்களிடம் இருந்து சுமார் 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான பல்வேறு பொருட்களைப் பல தவணைகளாகக் கொள்முதல் செய்து பெற்றுக்கொண்டு ஏமாற்றியுள்ளனர். பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் அளித்த புகாரின் பேரில், போரூர் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். மோசடியில் ஈடுபட்ட நபர்களின் இருப்பிடத்தைக் கண்டறிந்த போலீசார், அம்பத்தூரைச் சேர்ந்த அப்துல் ரகீம் (அம்பத்தூர்), ஆஷிகா (அப்துல் ரகீமின் மனைவி), முக்தார் அகமது (உறவினர்), ஜாகீர் உசேன் (உறவினர்) ஆகிய 4 பேரை நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் போரூர் போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் ஒரு திடுக்கிடும் தகவல் வெளிவந்தது.

இந்த மோசடி கும்பலின் முக்கிய சூத்திரதாரியான அப்துல் ரகீம், ஏற்கனவே இதே போன்ற பல்வேறு ஆன்லைன் மற்றும் ஆவண மோசடி வழக்குகளில் சம்பந்தப்பட்டு, சைபர் கிரைம் போலீசாரால் ஏற்கனவே 2 முறை கைது செய்யப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது.
தற்போது சிறையில் இருந்து வெளியே வந்த பிறகும், தனது மனைவி மற்றும் உறவினர்களைச் சேர்த்துக்கொண்டு மீண்டும் இமாலயப் பண மோசடியில் இறங்கியுள்ளார். கைதான 4 பேர் மீதும் கூட்டுச் சதி, போலி ஆவணம் தயாரித்தல், ஏமாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
