அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கைது!
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவில் வே.சத்திரப்பட்டியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இளைஞர் ஒருவர் அதே பகுதியில் உள்ள கண்மாய் கரையில் மர்மமான முறையில் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு உயிரிழந்து கிடந்தார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பிரபாகரன் வீட்டுக்கு போலீசார் சோதனை செய்ய சென்றனர். அப்போது வீட்டில் அவர் இல்லாததால் அவரது தந்தையை போலீசார் விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இதனை அறிந்த பிரபாகரன் ஆத்திரம் அடைந்தார்.

தான் வீட்டில் இல்லாதபோது போலீசார் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து தனது தந்தையை மிரட்டல் அழைத்து சென்றதாக கூறி பிரபாகரன் தனது கூட்டாளியுடன் மது போதையில் போலீஸ் நிலையத்திற்குச் சென்றுள்ளார். அங்கு பிரபாகரன் தனது கூட்டாளியுடன் சேர்ந்து காவல் நிலையத்தில் உள்ள பொருட்கள் அனைத்தையும் அழித்தும், உடைத்தும் சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பினார்.

இந்நிலையில் சம்பவம் குறித்து தகவல் அறிந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் காவல் நிலையத்திற்கு செல்ல முயற்சித்த போது போலீசார் அவரை முத்துலிங்காபுரத்தில் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து ஆர்.பி.உதயகுமார் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டத்தை கைவிட மறுத்ததால் போலீசார் ஆர்.பி.உதயகுமார் மற்றும் அவரது ஆதரவாளர்களை கைது செய்துள்ளனர்.
