தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்.பி... முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்!
ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியின் முன்னாள் அதிமுக எம்.பி-யான K.N. ராமச்சந்திரன், தமிழக முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றுள்ளார்.
கடந்த மே மாதம் அதிமுகவிலிருந்து விலகிய முன்னாள் எம்.பி. K.N. ராமச்சந்திரன், தவெக பொதுச் செயலாளரும், அமைச்சருமான என்.ஆனந்த் முன்னிலையில் முறைப்படி தவெகவில் தன்னை இணைத்துக் கொண்டார். கட்சியில் இணைந்ததைத் தொடர்ந்து, இரு தினங்களுக்கு முன்பு சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யை அவர் நேரில் சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பின் போது, "தமிழ்நாட்டு மக்களின் ஒரு பெரும் நம்பிக்கை நட்சத்திரமாக முதலமைச்சர் விஜய் திகழ்கிறார்" என்று K.N. ராமச்சந்திரன் அவரைப் பாராட்டி மகிழ்ந்தார். இதைக் கேட்ட முதலமைச்சர் விஜய், முன்னாள் எம்.பி. K.N. ராமச்சந்திரனைப் புன்னகையுடன் வரவேற்று, தவெகவில் அவரது அரசியல் பணி சிறக்கத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, மாற்றுக்கட்சிகளில் உள்ள முன்னாள், இந்நாள் முக்கியப் பிரமுகர்கள் தவெகவை நோக்கி வருவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் செல்வாக்கு மிக்க முன்னாள் அதிமுக எம்.பி. ராமச்சந்திரன் முதலமைச்சரைச் சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
