முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார் - மைசூரில் சோகம்!
தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் மறைந்த பொதுச்செயலாளருமான செல்வி ஜெ.ஜெயலலிதாவின் மூத்த சகோதரர் வாசுதேவன் (92) வயது முதிர்வு காரணமாக கர்நாடக மாநிலம் மைசூரில் நேற்று காலமானார்.
கர்நாடகா மாநிலம், மாண்டியா மாவட்டம், மேலுகோட்டேவை சேர்ந்தவர் ஜெயராம். ஜமீன்தாரரான இவருக்கு ஜெயம்மாள் மற்றும் வேதவள்ளி (சந்தியா) என இரண்டு மனைவிகள் இருந்தனர். இதில் முதல் மனைவி ஜெயம்மாளின் ஒரே மகன் தான் தற்போது காலமான வாசுதேவன். ஜெயராமின் இரண்டாவது மனைவி சந்தியாவின் மகள் தான் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. உறவு முறையில் வாசுதேவனும், ஜெயலலிதாவும் அண்ணன் - தங்கை ஆவர்.
உறவு முறையில் அண்ணன் - தங்கையாக இருந்தாலும், வாசுதேவனுக்கும் ஜெயலலிதாவிற்கும் இடையே நெருங்கிய குடும்ப பந்தம் இருந்ததில்லை என்று கூறப்படுகிறது. தன் தங்கை ஜெயலலிதா தமிழக முதல்வராகப் பொறுப்பு வகித்த காலத்தில், அவரைச் சந்திப்பதற்காக வாசுதேவன் இரண்டு முறை நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டிற்குச் சென்றுள்ளார். ஆனால், பல்வேறு காரணங்களால் அவரால் தன் தங்கை ஜெயலலிதாவைச் சந்திக்க முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.
மைசூரின் பன்னூரு அருகில் உள்ள சாமனஹள்ளி கிராமத்தில், தன் வளர்ப்பு மகள் பவித்ரா, மருமகன் மற்றும் பேரப்பிள்ளைகளுடன் வாசுதேவன் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வந்த அவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்குப் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
