முன்னாள் தலைமைச் செயலாளர் ராகேஷ் மேத்தா தற்கொலை - தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு!

 
ராகேஷ்

டெல்லியின் முன்னாள் தலைமைச் செயலாளரும், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான ராகேஷ் மேத்தா (75) உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள தனது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நொய்டா செக்டர் 82-இல் உள்ள கேந்திரிய விஹார்-2 சொசைட்டியில் வசித்து வந்த ராகேஷ் மேத்தா, அங்குள்ள தனது குடியிருப்பில் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

தான் எடுத்த இந்த விபரீத முடிவுக்கு "மனநலம் மற்றும் உடல்நலப் பிரச்சினைகள்" தான் காரணம் என்று அவர் குறிப்பிட்டு எழுதியிருந்த தற்கொலை குறிப்பை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இவரது உடல் டெல்லி லோதி சாலை தகன மையத்தில் குடும்பத்தினரின் முன்னிலையில் தகனம் செய்யப்பட்டது.

1975-ம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர், முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் தலைமையிலான ஆட்சிக் காலத்தில் டெல்லியின் தலைமைச் செயலாளராக மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றினார். இவரது பதவிக்காலத்தில் தான் டெல்லியில் புகழ்பெற்ற 2010 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன.

டெல்லி மாநகராட்சியின் ஆணையராகவும், மின்சாரம் மற்றும் போக்குவரத்துத் துறைகளின் முக்கியப் பொறுப்புகளிலும் பணியாற்றியுள்ள இவர், நகரின் உள்கட்டமைப்பு மற்றும் பல முக்கியப் போக்குவரத்துத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் முக்கியப் பங்காற்றியுள்ளார். முன்னாள் உயர் அதிகாரியின் இந்த திடீர் மறைவு அரசு மற்றும் நிர்வாக வட்டாரங்களில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.